Showing posts with label விழிப்புணர்வுக் கட்டுரைகள். Show all posts
Showing posts with label விழிப்புணர்வுக் கட்டுரைகள். Show all posts

Saturday, January 7, 2012

ஏன் இந்தக் கொலைவெறி ?

Photo Courtesy : healthcareconsiderations.blogspot.com

குறிப்பு : சென்ற வருடம் என்னுடைய பழைய வலைப்பூவில் எழுதிய பதிவு, அதனை மறு பதிப்பு செய்கிறேன்.

அனைவருக்கும் முதற்கண் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 

சொந்த அலுவல் காரணமாக தொடந்து எழுத இயலாமைக்கு எனது வருத்தங்கள். வருடத்தின் முதல் பதிவு இவ்வாறு அமைய வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், காலத்தின் கட்டாயம் அதுவெனில் யாது செய்ய இயலும் .

ற்று நிதானமாகவும் நியாமாகவும் பார்க்க வேண்டிய விஷயம் தான் அண்மையில் அரங்கேறியிருப்பது. இரத்தக்கறைகள் படியாத செய்தித்தாள்கள் வருங்காலத்தில் வெளியாகாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு அச்சிடப்படாத ஆதாரம். மருத்துவர் ஒருவர், மதிகெட்ட மூடன் ஒருவனால் மரணத்திற்கு தள்ளப்பட்ட சம்பவத்தின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பீர்கள் ! அலசியிருப்பீர்கள் !

நான் பேசவிருப்பது ...
அதைப் பற்றியல்ல ; அதைச் சார்ந்திருப்பது பற்றி . ஆம், இத்தகைய சூழல் உருவாவதற்கு காரணம் சில அடிப்படைத் தவறுகளே ! தவறுகள் மக்களிடம் மட்டுமல்ல, அங்கங்கே  மருத்துவ சமூகத்திலும் புதைந்திருப்பது உண்மை தான் ! ( என்னுடைய மருத்துவ நண்பர்கள், என்னுடைய இக்கருத்துக்குக் குறைபட்டுக்கொண்டாலும், இதில் பொதிந்திருப்பது உண்மை என்பது அவர்கள் அறிந்ததே ! )

ருத்துவர்களின் தவறுகளில் சில ...

 • பல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் அறிவுமிக்க மருத்துவர்களை உருவாக்குகிறதே தவிர மனிதம் நிறைந்த மருத்துவனை உருவாக்க மறந்து விடுகிறது. வலிக்கான மருந்தை மட்டுமே பரிந்துரை செய்யும் எங்கள் படிப்பு, வலியின் வேதனையை ஒரு போதும் உணரச்செய்ததில்லை. ( இந்த 5 ஆண்டு கால படிப்பில், இதுவரை எந்தவொரு புத்தகமுமோ, பேராசிரியரோ நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை.)
 • தெரிந்தவரின் நோயாளி என்றால் முன்னுரிமை கொடுப்பதும், மிகவும் கவனத்துடன் கையாள்வதும், அதுவே அறியாத ஒருவர் என்றால் அலட்சியம் காட்டுவதும் நடைமுறையில் நடைபயின்று கொண்டு தான் இருக்கிறது. ( பிரிவினைக் கலாச்சாரம் ( Partiality ) மற்ற துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக , உயிரைக் காக்கும் இத்துறைக்கு அது அவசியம் தானா? )
 • பணத்தின் பின் மருத்துவம் பயணிக்க ஆரம்பித்து பலவருடம் ஆகிவிட்டது! இந்த மாற்றத்திற்கு காரணம் மருத்துவர்கள் மட்டுமல்ல, மக்களும் தான் ! தனியார் மயமாக்கல், வணிகமயமாக்கல், அரசியல் உள்ளீடுகள் அனைத்தும் இவற்றின் அடிப்படை நாதங்கள்!
 • தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்ளும் மெத்தனப்போக்கு ! மருத்துவன் என்ற நிலையில் இருந்து வழுவி, தன்னை ஒரு கடவுளாக பாவித்துக்கொள்ளும் பரிதாபச் செயல் ( விதிவிலக்குகள் வெகுசிலர் மட்டுமே ! )
 • ஒற்றுமையின்மை ! என் வீட்டு கூரை எரிகிற வரைக்கும் எனக்கு என்ன கவலை என்னும் சுயநல எண்ணம் ! ( மருத்துவர்கள் அவசியம் களைய வேண்டிய ஒரு குணம் ! இது அறிவுரையல்ல - காலத்தின் கட்டாயம் )

க்களின் அறியாமைகளில் சில ....

 • பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் மெத்தப்படித்தவர் ; அதிகம் அறிந்தவர் ; நம்மை விரைவில் நோயிலிருந்து விடுவிப்பார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கை .  ( அறிவு சார்ந்த அளவுகோலை பணத்தின் கைகளில் கொடுத்தது யார் ? இந்தச் சமூகம் தான். இலவசமாக வைத்தியம் பார்க்க நாங்கள் தயார் ! அப்பொழுது கூட நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் - ஓசியில வைத்தியம் பார்குறாரே ! நல்லா பார்ப்பாரா ? )
 • ஒத்துழைப்புத் தாருங்கள் ! மருத்துவர்களும் மனிதர்களே ! அவர்களுக்கும் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளும் வைக்கப்பெற்றிருக்கும் . ( புரியவில்லை என்றால் ஒருமுறை உங்கள் அருகில் உள்ள அரசு மருத்தவமனைக்கு சென்று வாருங்கள். நோயாளிகளை மருத்துவர்கள் நிந்திப்பதை மட்டும் கவனிக்காமல் அதன் அர்த்தத்தையும் அலசிப்பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு கட்டாயம் புரியும். )
 • அரசு மருத்தவமனைகளில் ஒழுங்கான மருத்தவம் செய்யப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கும் அறிவாளிகளே ! என்றேனும் ஒரு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் சரிவர வழங்கப்படுகின்றனவா ? நோயாளி, மருத்துவர், செவிலியர் விகிதாசாரம் சரியான அளவில் இருக்கிறதா என  யோசித்துள்ளீர்களா ? 
 • ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் ! ஒரு உயிர்க்கொல்லி (HIV) நோயாளியின் அருகில் அமர்ந்து நீங்கள் பயணம் செய்வீர்களா? ஆனால், அதே நோயாளிகளின் இரத்தத்தை நாங்கள் கையாள்வதும், அவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிப்பதும் நடைப்பெற்றுக் கொண்டுதானே இருக்கிறது ! அச்சமயம் ஏதோ ஒரு உதிரத்துளி எங்கள் கண்களிலோ, காயம்பட்ட எங்கள் கைகளிலோ தவறி விழுந்தால், தவறு செய்யாமலேயே நாங்கள் தண்டிக்கப்படுவோமே ! அதனை என்றேனும் யோசித்துள்ளீர்களா ? உங்கள் நோயைப் போக்குவதற்காக நாங்கள் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
 • கடவுளாக எங்களைத் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது எங்கள் கடமை. கடமை செய்பவர்களை முடிந்தால் பாராட்ட வேண்டுமே தவிர தொழக் கூடாது.

றுதியாக, அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Sunday, October 16, 2011

மருத்துவக்கல்லூரி மர்மங்கள் !

 
" மருத்துவமனைகளெல்லாம்
மரணத்திற்கு எதிராக பொய்யாகவே போராடிக்கொண்டிருக்கின்றன! "

வைரமுத்துவின் ஆழமான வரிகள்; உண்மை வரிகளும் கூட ! மருத்துவமனைகள் கோவிலாக போற்றப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், அதன் இன்றைய சூழலோ சற்று கேள்விக்குரியது தான். பணம் படைத்தவனுக்கு தனியார் மருத்துவமனைகள் எனவும், தினம் உழைப்பவனுக்கு அரசு மருத்துவமனைகள் எனவும் எழுதப்படாத சட்டம், நம் இந்திய திருநாட்டில் நடைமுறையில் உள்ளது, அதற்கு தமிழக மருத்துவமனைகள் மட்டும் விதிவிலக்கல்ல !

ரூ.400 கூட மாதச்சம்பளம் வாங்க முடியாத ஏழைத்தமிழனிடம் லஞ்சம் பிடுங்கப்படுகிறது நானூறுக்கும் மேலாக. இதைச் செய்பவர்கள் கல்லூரி முதல்வர்களோ, மருத்துவக் கண்காணிப்பாளர்களோ, துறைத்தலைவர்களோ அல்ல  தூக்குப்படுக்கைத் (Stretcher ) தள்ளுபவர்களும் சக்கர நாற்காலி ( Wheel Chair ) தள்ளுபவர்களுமான கடைநிலை ஊழியர்கள் (MNA - Male Nursing Assistant & FNA - Female Nursing Assistant ). தற்பொழுதைய நிலவரப்படி அவர்களின் விலைப்பட்டியல் இதோ உங்கள் முன்.

 • Stretcher அல்லது Wheel Chair  தள்ள - ரூ.450
 • Wound Dressing செய்ய - ரூ.50
 • இதர உதவிகளுக்கு - ரூ.50  முதல் ரூ.500 வரை .

ப்படியாக ஒரு நாளைக்கு தோராயகமாக பத்து நோயாளிகளை அறுவை அரங்கத்தில் இருந்து படுக்கை பிரிவிற்கு மாற்றுவதற்கு ரூ.4500 லஞ்சமாக வாங்கப்படுகிறது. அதோடு இவர்களுக்கு அரசு அளிக்கும் சம்பளம் ரூ.10 ,000க்கு மேல். மேலார்ந்த பெரியவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய சம்பள விவரங்கள்.
 • பயிற்சி மருத்துவரின் மாதச்சம்பளம் - ரூ.7400
 • முதுகலை மாணாக்கரின் மாதச்சம்பளம் - ரூ.30,000

டித்த மருத்துவர்களைக் காட்டிலும் இவர்களின் சம்பளமும், அதிகாரமும் அரசு மருத்துவமனைகளில் அதிகம் தான்.

ண்மையில் இரண்டு ஊழியர்களை ஏதோ ஒரு அரசு மருத்தவமனையில் லஞ்சம் வாங்கியதற்காக தற்காலிகமாக பணியில் இருந்து அக்கல்லூரியின் மருத்துவக்கண்காணிப்பாளர் நீக்கியுள்ளார். இது வரவேற்க வேண்டியது என்றாலும், இத்தகைய லஞ்சப்பேர்வழிகளைக் களைய மருத்துவமனைகள் யாதொரு நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது வருத்தமே !

குறைகளைக் கண்டுகொள்ள வேண்டிய நிர்வாகம் , காங்கிரஸ் ஆட்சி போல் மௌனம் காத்தால் மக்களின் நலம் தான் வீணாகும். இதில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அதோடு சற்று வருத்தமும் தருவது அந்த ஊழியர்கள் உபயோக்கிக்கும் வார்த்தைகள் ! நோயாளிகளின் உறவினர்களிடம் நோயாளிகளை அறுவை அரங்கத்திற்கு செல்லும் முன் காண்பித்து, " அங்க பார்தீங்கள ! ரெண்டு பெரிய டாக்டர் , ரெண்டு சின்ன டாக்டர் , ரெண்டு நர்ஸ் ... நீங்க தர காசு எல்லாம் இவங்களுக்கு தான் போகுது ! எல்லோரும் வாங்கின பிறகு எங்களுக்கு மிஞ்சுறது ஏதோ அஞ்சோ பத்தோ தான் ! " இதில் யார் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பது கூடவா தெரியாமல் சுழல்கிறது மருத்துவ உலகம்.

க்கள் சமுதாயத்தின்கண் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலமாகவும், அதிகாரம் பொருந்தியவர்கள் அடங்கி போகாமல் இருப்பதாலும் இதைக் களைய முடியும், கண்ணீரைத் துடைக்க இயலும். சிந்திக்க வேண்டியது நம் அனைவர் கைகளிலும் உள்ளது. இதனை எடுத்துரைக்க மருத்துவன் என்ற பட்டம் தேவையில்லை ; மனிதன் என்ற உணர்வு இருந்தால் போதும். விழித்திடு தமிழா !


" உயிரைக் காக்கும் உன்னத சாலையில்;
உழைப்பை உறுஞ்சும் ஊழல் வேர்கள். "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Thursday, July 7, 2011

கருக்கலைப்பு காலத்தின் கட்டயாமா ?


Copyright -  Jeremy Snell @ flickr

ண்மையில் முகப்புத்தகத்தில் ஒரு வீடியோ பதிவு பார்த்தேன். நீங்களும் அதனைப் பார்த்தால் நான் கூற வருவது உங்களுக்கு எளிதாக விளங்கும் என விழைகிறேன். மேலும், தன் இன்பத்தை முன்னிறுத்தும் இந்த இளைய சமுதாயத்தில் கருக்கலைப்பு என்பது அத்தியாவசியமானதாக மாற்றப்பட்டது வருந்தத்தக்கது.
Medical termination of Pregnancy Act ( MTP) 1947 , ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. Jammu & Kashmir இல் மட்டும் இச்சட்டம் நவம்பர் 1 , 1976  முதல் அமல்படுத்தப்பட்டது. அச்ச்சட்டத்தின் படி 20  வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம். அச்சட்டம் கருக்கலைப்பு செய்வோர் ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அக்கருக்கலைப்பு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இவ்வகையில் நடைபெறாத கருக்கலைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானவை. லர் பயத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் கருக்கலைப்புக்குத்  தாங்களே  மருந்துகளை உட்கொள்வதும், பல வினோதமான முறைகளைக் கடைப்பிடிப்பதும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய செயல்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் முடியும் வாய்ப்புகளும் உள்ளது. 

நான் என் சில நெருங்கிய நண்பர்கள் மூலம் அறிந்த செய்தி. வேலூரில் உள்ள புகழ் பெற்ற தனியார்  கல்லூரியில் கருக்கலைப்புகள் சர்வசாதாரணாமாக நடைபெறுகிறது என்றும், அதற்கு என்றே " ABORTION WARD"  இருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். அது எந்த அளவு உண்மை என்பது நான் அறியாத ஒன்று.என்னுடைய கல்லூரியின் வட  இந்திய முதலாமாண்டு மாணவன் ஒருவனிடம் அவன் பெண் தோழியைப் பற்றி கிண்டலாக விசாரித்துக் கொண்டிருந்தோம். அதற்கு அவன் கூறியது அதிர்ச்சியுடன் அச்சம்மும் அடைய செய்தது. " Yes sir ! We had sex when I was in 12th and she was in her 10th. Whenever I had a feeling, I used to call her and We have sex in the hotel opposite to the lake at my Home town. " பட்டென்று அறைய வேண்டும் போல் இருந்தது. அறைந்தால் ராக்கிங் கொடுமை என்றாகி விடுமே !!? அதனோடு மட்டுமல்லாமல் சென்னை, மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களில் கல்லூரி மாணவ மாணவியர் வீட்டுக்குத் தெரியாமல் வெளியில் தங்குவதும், ஹார்மோன் பொங்கி இன்பம் காண்பதும், பின்பு கண்ணீர் சிந்துவதும் , இன்னும் சிலர் 'அது எல்லாம் ஒரு விசயமே இல்ல ! ' என வெகு சாதரணாமாக எடுத்துக் கொள்வதும் நடைமுறையில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது . என்னுடைய நெருங்கிய முகப்புத்தக நண்பர் கூறியது இன்னும் அதிர்ச்சியூட்டியது , " பாஸ், லவ் லவ்வுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தாளுக ; நான் தெளிவா சொல்லிட்டேன் , 'I DON'T BELIEVE IN RELATIONSHIP, IF U WANT WE CAN SHARE BED' னு , அதுக்கப்புறம் 10 டு 15 டைம்ஸ் பாஸ் ! ". எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை , அதன் பிறகு அந்த நட்பு முகப்புத்தகத்தில் Unfriend பட்டனை கிளிக் செய்வதில் முடிந்தது.

ருக்கலைப்புக்கு காரணம் ஏழ்மை, இளமை, அறியாமை, கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமை என பல இருந்தாலும் , அண்மைக்காலமாக PREMARITAL SEX முக்கிய காரணம் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதனைக் காட்டிலும் வருத்தம் என்னவென்றால், இதில் தவறில்லை என ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தெரிவித்திருப்பதுதான். டை முதல் நடை வரை 'நாகரீகம்' என மார்தட்டிக் கொள்ளும் இந்த நவீன இளைய சமுதாயம் இதனையும் நாகரீகம் என சேர்த்துக்கொள்ளுமோ?! "ஒருவன் செய்தால்  தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன்  பெயர் நாகரீகம். " இதற்கு "தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா என்று சப்பைக் கட்டு வேறு !!".


சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.

தையெல்லாம் பார்க்கும் பொழுது என் மனதில் எழுவது ஒன்றே ஒன்று தான்...

" புதுமை என்ற பெயரில் நாம் அள்ளிப் பூசிக்கொள்வது சந்தனமல்ல ; சாக்கடையே  ! "
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Saturday, May 28, 2011

முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகளா ?

Copyright - http://www.nytimes.com

முன் குறிப்பு : அண்மையில் 'துப்பாக்கியில்' ஏற்பட்ட பிரச்சனைகளும், அதன் பிறகு அப்படத்தின் இயக்குனர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகக் கூறியதுமே இக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை உந்தியது!

" ன் இந்தக் கேள்வி ? உண்மை தானே ! "
என்று உங்கள் இதயத்தில் எங்கேனும் ஒரு மூலையில் நீங்கள் யோசித்தீர்கள் என்றால் உங்களைக் காட்டிலும் ஒரு அறிவிலி இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஏனென்றால், இஸ்லாம் மதத்தின் வலிமையையும், அதனைப் பின்பற்றும் நண்பர்களின் மனத்தூய்மையையும் அனுபவத்தால் பெறாதவன் பிதற்றுகிற வார்த்தைகள் தான் இவை.

சில சமயம் நான் யோசிப்பதுண்டு ... ஒரு குறுகிய சமூகம் என்பதற்காகவே அவர்கள் மீது நாம் குற்றம் சாற்றுகிறோமா என்று ? ல்லை ... இல்லை .....  அப்படியொன்றுமில்லை ; பின்லேடன் , கசாப் போன்றோரை வசைபாடும் நாம் தான் அப்துல் கலாம் , ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரையும் பாராட்டுகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். ண்மை தான் . ஆனால், அதே நாம் தான் ... இஸ்லாமிய பெயர் கொண்டவர் என்பதற்காக, இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் என்று கூட பாராமல் ஆடைகள் கலைத்து , அமெரிக்க அரசு அவமானப்படுத்திய போது அமைதியாக இருந்தோம் . அப்பொழுது நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம். இப்பொழுது புரிகிறதா ! நான் ஏன் அப்படி சொன்னேன் என்று !

சில மதங்களுக்கு முன்பு சிம்பு நடித்த வானம் படம் பார்த்தேன் . அதில் வரும் பிரகாஷ்ராஜின்  கதாப்பாத்திரம் இன்று பெரும்பாலான இந்திய முஸ்லீம்களின் முகமாக பிரதிபலிக்கிறது.கசப்பானவை என்றாலும் அதுவே உண்மை .தோ ! எங்கோ ! மதமறியா மூடன் செய்யும் அற்ப செயல்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் கூண்டில் ஏற்றுவது அழகா?ண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ... எனக்கு வாய்த்த நண்பர்களுள் உண்மையானவர்கள் என் இஸ்லாமிய நண்பர்களே ! இதில் " உண்மையானவர்கள் "  என்று சொல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கோடிட்டுக் கொள்ளலாம். 

ன் இஸ்லாமிய நண்பன் ஒருவன் தன் மதம் மீது மிகுந்த பற்றுடையவன். நான் அவனுடன் அடிக்கடி இது பற்றி வாதிடுவது உண்டு. 
" முஸ்லீம்ஸ் எல்லாமே Terrorists தான் டா ! பாரு இன்னைக்குக் கூட Newspaper ல போட்டிருக்கான் ; நேத்து நடந்த குண்டு வெடிப்புக்கு ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தான் பொறுப்பேத்திருக்கான்  ! " .
து அவன் மனத்தைக் காயப்படுத்தியிருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும் . ன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் அவன் ஒன்றே ஒன்று மட்டும் சொல்வான் . " அவனுங்க எல்லாம் முஸ்லீம்சே இல்லடா ! உண்மையான இஸ்லாமியன் அன்பை மட்டும் தான் டா  விரும்புவான்

ப்பொழுது அவன் அளித்த பதில் மழுப்புவதாகவே தோன்றினாலும் ... இப்பொழுது நான் உணர்கிறேன் எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை என்று. ங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் ;
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்ததீர்கள். "
க்கிரகாரத்துக் கவிஞன் வாலி கூட ஒரு முறை தன்னை " கூன் பிறைகளால் செய்த கோதண்டம் " என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் உங்களுக்கு ஐயம் நீங்காவிடில் ஷாருக்கான் நடித்த " MY NAME IS KHAN " திரைப்படம் பாருங்கள் . உங்கள் பெரும்பாலான வினாக்களுக்கு விடை கிடைத்து விடும்.
சரி அதையெல்லாம் விடுங்கள் ; உங்களிடம் ஒரேயொரு கேள்வி .
ரம்ஜான், பக்ரீத் திருநாட்களில் உங்கள் இஸ்லாமிய நண்பன் உங்களுக்கு அளிக்கும் பிரியாணிச் சோற்றில் விஷம் இருக்கிறதா ? என்று ஆராய்ந்த பின்பா உண்பீர்கள்!


"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம் 
அறிவுக்கு மட்டும்தான் "    
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Thursday, May 26, 2011

எங்கே போனது திண்ணை ?

Copyright : xavi.wordpress.com


" வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா 
வழிப்போக்கன் வந்துதான் தங்கி செல்லுவான் சும்மா "  

என்ற நா.முத்துகுமாரின் வரிகளைக் கேட்ட பொழுது தான் சுரீர் என்று உரைத்தது. நம் கலாச்சாரம் காலத்தால் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று.எவனோ ஒரு வழிபோக்கனுக்காக தன் இல்ல வடிவமைப்பில் இடம் கொடுத்த தமிழனின் கட்டடக்கலைக்கு முன்னால் உலக அதிசயங்களும் எனக்கு அற்பம் தான்.இன்றைய சூழலில் எங்கேனும் திண்ணை வைத்த வீடுகளை நான் பார்க்க நேர்ந்தால் அதிசயிப்பது உண்டு.

சிறு வயதில் என் அம்மாச்சி வீட்டிற்கு செல்லும் போது இத்திண்ணைகளின் தரிசனம் எனக்குக் கிட்டும். அந்த இளம் பருவத்தில் எங்கள் பொழுதுபோக்குகள் அனைத்தும் இத்திண்ணையில் தான். அங்கு தான் நான் தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி போன்ற கிராமத்துக்கு உரித்தான விளையாட்டுகளை நான் விளையாடியதுண்டு. என்னுடைய் அழுகையையும் ஆனந்தத்தையும் திண்ணையோடு பகிர்ந்து கொண்ட காலமது.சில சமயங்கள் நான் ஊருக்கு செல்லும் பொது அந்த கால சாகுபடிக்கு ஏற்ப நெல்லோ, கம்போ, பருத்தியோ, உளுந்தோ ... மூட்டைகளாக அடுக்கப்பட்டிருக்கும். அப்பொழுது எல்லாம் அந்த மூட்டைகளின் மேல் எனக்கு கோபம் கோபமாக வரும் . பிறகென்ன, எங்களுக்கான இடம் பறிக்கப்பட்டால் கோபம் வராதா ?

ம்மாச்சி வீட்டிற்கு உறவினர்கள் அதிகம் பேர் சென்றிருந்தார்கள் என்றால், பெண்கள் எல்லாம் உள்ளே ; ஆண்கள் எல்லாம் திண்ணையில் தான். அன்று அளவறியா சந்தோசத்தில் நானும் என் சகாக்களும் இருப்போம். அதன் காரணம் ஏன் என்று இன்று வரை நான் அறியேன்.மாலைப்பொழுதுகளில் , திண்ணையில், அத்தை மடியில் தலைவைத்துத் தெருவில் செல்பவர்களை வேடிக்கை பார்ப்பது என் சிறு வயது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.அப்பொழுது எதிர்வீட்டு திண்ணைகளில் வயசான பெருசுகள் தத்தம் பழங்கதைகளைச்  சொல்லிக்கொண்டிருக்கும். அப்படி என்னதான் அவர்கள் பேசுவார்கள் என்று அந்த வயதில் நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அதனால் தான் என்னவோ அரட்டையடிக்கும் பல வலைப்பூவிற்கும், ஞானி போன்ற எழுத்தாளர்களின் வலைத்தளங்களிலும் " திண்ணை " என்ற சொல் துரிதமாய் பயன்படுத்தப் படுகிறது." திண்ணைப்பள்ளிக்கூடங்கள் " தென்னிந்தியாவில் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. திண்ணைகள் நம் கலாச்சாரத்தின் எச்சம்.

சில மாதங்களுக்கு முன்பு நான் " தக்க்ஷின் சித்ரா " சென்றிருந்த போது செட்டிநாட்டுத் திண்ணைகளைப் பார்த்தேன். எனது நண்பர்கள் உள்ளே செல்ல நான் மட்டும் அந்த திண்ணையில் அமர்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதின் பாதையில் நடந்துவிட்டு சென்றன. சன்னல் ( MICROSOFT WINDOWS ) வழியே உலகைப் பார்க்கும் என் போன்ற இளைய சமூகத்திற்கு திண்ணைகள் தூரம் தான்.தனைப் படிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ! எங்கேனும் திண்ணையை நீங்கள் கண்டால் ஐந்து நிமிடம் அமர்ந்து விட்டு செல்லுங்கள்.

" உறவுகள் மறந்த உலகில் உறவுகளை உணர்வீர்கள் "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...