Saturday, November 17, 2012

நான் விஜய் ரசிகனில்லை :(



முன்குறிப்பு: இது ஒரு குறிப்பிட்டு தலைவனைப் பின்பற்றும் ரசிகர்களை மட்டும் குறிப்பிடும் பதிவல்ல; அறிவின்றி நடந்து கொள்ளும் அத்தனை ரசிகர்களுக்குமான பதிவு.

மேலுள்ள தலைப்பைச் சற்று உரக்கத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ரசிகர்கள் என்ற பெயரில் நாம் செய்யும் கண்மூடித்தனங்களைப் பார்க்கும் பொழுது. உங்களுக்குத் தெரியுமா ? இரத்தமின்றி எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படாமல் போகின்றன என ; உங்களுக்குத் தெரியுமா ? டெங்கு போன்ற காய்ச்சலுக்கு இறுதிநிலை சிகிச்சை இரத்தம் தான் என ; உங்களுக்குத் தெரியுமா ? தன் இரத்தத்தைப் பிரித்துதான் உங்கள் தாய், உங்களுக்கு தாய்ப்பால் தந்தாள் என . எனக்குத் தெரியும் ரசிகர்களே ! உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என !

ன் தலைவனின் திரைப்படம் வெளியாகிறது என்றால் போதும், நூறோ ஐந்நூறோ டிக்கெட் பற்றி கவலையில்லை, அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி, வெற்றிப்புன்னகைப் பூத்து, காட்சிக்கு காட்சி கைத்தட்டி, 'எங்க தளபதி டா' என ஆன் தி ஸ்பாட் வசனங்கள் பேசி, போஸ்டர் ஒட்டி, கட்-அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்து, உணர்சிகளை விற்று உல்லாசம் காணும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . இரத்தத்தின் அருமையும் உயிரின் மதிப்பும் . கோபம் கண் மறைத்து, வார்த்தைகள் ஏ சான்றிதழ் வாங்க காத்திருக்கும் பொழுதும், ரசிகர்களாகிய உங்களை கண்ணியமாகத் திட்டத்தான் விழைகிறேன்.

ன் இந்தக் கோபம் என தாங்கள் வினவினால், அதற்கான பதில் கீழுள்ள புகைப்படம் தான்.



தியுள்ள மானிடன் செய்யும் செயலா இது ? பால் விலையை விட இரத்தம் மலிவாகிப்போனது என்ற எண்ணத்திலோ தாங்கள் இத்தகையத் தாரகக் கொள்கையைப் பூண்டுள்ளீர்கள் ! நானும் ரசிகன் தான் சில நடிகர்களின் நடிப்புக்கு மட்டும். சரி ரசிகா !உன்னிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விழைகிறேன் ; நீ அதற்கு சினம் கொண்டாலும் சரி.

  1. உன் தலைவன் என தலையில் வைத்துக் கொண்டாடுகிறாயே, உன் வீட்டுச்சோற்றுப்பருக்கைக்கு உப்பாவது அளித்திருப்பானா உன் தலைவன்?
  2. உன் தலைவனுடைய அரசியல் ஆசைக்கு, பலியாகப் போவது உன் இளமையும் கனவுகளும் தான் என்பது உனக்குத் தெரியுமா ?
  3. 'சினிமா' என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் தான்; வாழ்க்கையில்லை என்பது உனக்குத் தெரியுமா ?
  4. கண்மூடித்தனமாக நவீன சாமியார்களைப் பின்பற்றும் பக்தர்களுக்கும் , தலைவனைத் தொழும் உனக்கும் வித்தியாசம் இல்லை என்பது தெரியுமா ?
  5. இறுதியாக, நீ செய்யும் அறிவிலி செயல்களை உன் தலைவன் ரசிக்க மாட்டான் என்பதாவது உனக்குத் தெரியுமா ? 

தற்கான பதிலை நீ தேடி அடைந்தால், இதுபோன்ற செயல்களில் நீ ஈடுபட மாட்டாய். போட்டி நடிகர்கள் இருவருமே கைக்குலுக்கி, கைக்கடிகாரம் பரிசளித்து அன்பு பாராட்டினால் கூட , 'நான் அவர் ரசிகன்; நான் இவர் ரசிகன்' என நீ அடித்துக் கொண்டு தானே இருக்கிறாய் . உன் தலைவன் பணங்களில் படுத்துப்புரள்வதைக் கண்டு மகிழும் உனக்கு, உன் வீட்டில் படுக்கக் கூட பாய் இல்லை என்பதை யாரடா சொல்லி புரியவைப்பது ? என்னைப் பொறுத்தவரை உன் தலைவனுக்கு செய்யும் அதிகப்பட்ச மரியாதை எதுவாக இருக்க வேண்டும் தெரியுமா ? உனது கைத்தட்டல் தான் . தலைவன் மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் உன்மேல் சமூகப்பிரச்சனைகளும், வீட்டுக்கஷ்டங்களும் அவ்வப்போது தண்ணீர் தெளித்துக்கொண்டு தான் இருக்கிறது. நீதான் விழிக்க மறுக்கிறாய். ஆம் ! நான் விஜய் ரசிகனில்லை ; உன்போல் கண்மூடித்தனமாகப் பின்பற்ற !

விழித்தெழு ரசிகா 
வீரியம் கொண்ட விதையாய் 
விவேகம் உள்ள மனிதனாய்  !

ப்பதிவைக்கண்டு, என்னைத்திட்ட வேண்டும்; என் மேல் வழக்கு பதிய வேண்டும் என் விழைந்தால் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் . ஆனால், அதற்கு முன்பு அருகிலுள்ள இரத்த வங்கியில் இரத்ததானம் செய்து விட்டு வா ! ( ரசிகர் மன்றங்கள் மூலம் இரத்த தானம் செய்தது என்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது ; ஏனெனில் அந்தப் புண்ணியத்திற்கு உரியவன் நீயில்லை ; உன் தலைவன். )


பின்குறிப்பு : 'நான் விஜய் ரசிகனில்லை' என்பதை, 'நான் அந்த மூட செயலைச் செய்த விஜய் ரசிகன் போல் இல்லை' எனவே கொள்ளவும்.


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, November 14, 2012

என் கனவுகளின் தொகுப்பு !


கிறுக்கல்கள்100 நண்பர்களுக்கு முதற்கண் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீண்ட போராட்டங்களுக்குப்  பிறகு, அண்மையில் தான் ஒரு குறும்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை முன்னமே முகப்புத்தகத்தில் நான் பகிர்ந்திருந்தாலும், நேற்று தீபாவளி நன்னாளில் உங்களுக்குச் சொல்லலாம் என விழைந்தேன். பிறகு தான், என் ஞான ஒளியில் ஒரு கீற்று என்னை உசுப்பேற்றி கீழ்வரும் வார்த்தைகளைக் கூறியது ! "அடேய் அற்ப சத்தியசீலா ! ஒருவேளை உனது நண்பர்கள் இனிப்புகளிலோ, வெடிச்சத்தங்களிலோ, வேடிக்கை வெளிச்சத்திலோ, துப்பாக்கியிலோ ( நேற்று படம் பார்த்த எனது நண்பர்கள் நன்றாக உள்ளது என சொல்லிய காரணத்தால், கூடிய விரைவில் நானும் துப்பாக்கியால் சுடப்படக் கூடும்), இல்லை துறு துறுவென ஆங்கிலம் பேசும் தமிழ் நடிகையின் பேட்டியிலோ மெய்மறந்திருக்கக்கூடும்; அப்பொழுது உன்னுடைய கிறுக்கல்கள்100, கிழிக்கப்படும் அல்லவா ! " யோசித்தேன்; ஆதலால் தான் இன்று இவ்வெளியீடு !

நிவேதிதா அவர்களின் தயாரிப்பில், கௌதமின் இயக்கத்தில், மற்றும் பலர் கடின உழைப்பாலும், கற்பனைத்திறத்தாலும் உருவாகிக்கொண்டிருக்கும் உன்னத படைப்பு தான் " என் கனவுகளின் தொகுப்பு ". அடியேன் ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியதும் இதற்கே ! ( கீழே, இடமிருந்து வலம் , ஐந்தாவது  இடத்தில் அடியேன் பெயர் இருப்பதை நோட் செய்யவும்.) என்னதான் நாம் பணியாற்றும் படம் என்றாலும், விமர்சனம் என்று வரும்பொழுது சற்று கராராகத் தானே இருக்க வேண்டும் ! இனி வருவது "போஸ்டர் விமர்சனம்".
இதுவரை இரண்டு போஸ்டர்களை அக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றினை மட்டும் நாம் பார்ப்போம்.

ரு இளைஞன் தனது அறையில், LED வெளிச்சத்தில், இடது கையால் தாளில் எழுதிக்கொண்டிருப்பது போல அக்காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகே, தலையணை போன்று இரண்டு புத்தகங்கள். சரி இப்பொழுது நம் கற்பனையையும் பிறகு விமர்சனத்தையும் தொடரலாம்.

த்தகைய சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது, ஒரு கல்லூரி மாணவன் தன்  காதலிக்கு கடிதம் எழுதுவது போலவே தோன்றுகிறது. இருப்பினும் ஹீரோவின் முகம் சற்று சீரியசாக இருப்பதால், வேறு எதாவது முக்கியமான காரணமாகவும் இருக்கலாம். ஏன் ! ஒரு சமூகப்போராளி மின்வே(வெ)ட்டைக்
குறித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகக் கூட இருக்கலாம்; இல்லை, ஏதோவொரு தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவனாகக் கூட இருக்கலாம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று சூழலுக்குமே இந்தத் தலைப்புப் பொருந்திப்போவது தான். விமர்சனத்திற்கு செல்வோமா ?

ழுத்துக்கோர்வையும், அதனை அதற்கேற்ற இடத்தில் பொருத்தியிருப்பதும் அழகு. "WAKE UP MEDIA PRESENTS" எதார்த்தமான சேர்க்கை என்றாலும், தலைப்போடு பொருந்திப்போவது அழகு. இருப்பினும், WAKE UP MEDIAவிற்கு LOGO இல்லாதது திருஷ்டி. மின்னொளியிலும், சூழலுக்கேற்ற உடைத்தேர்விலும், முகபாவனைகளிலும் கதையின் பாத்திரப்படைப்பிற்குப் பொருந்திப்போகும் கதை நாயகன் 'அஜய் ரூபன்' நல்லதொரு தேர்வு. குறுப்படத்துறையிலும், திரைத்துறையிலும் அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக உள்மனம் கூறுகிறது. மேலும் தமிழ்க்குறும்படம், போஸ்டர் முழுவதுமே ஆங்கிலம் பூசியிருப்பது ஒரு நெருடல். டைரக்டர் கவனிக்க !


து எப்படியோ ! இது வெறும் கற்பனைக்கனவுகளின் தொகுப்பா ?  இல்லை சாதனைக்கனவுகளின் தொகுப்பா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

கொசுறு தகவல் : "என்னடா இவன் ! பத்து பதினஞ்சு பாட்டு எழுதுனவன் எல்லாம் சும்மா இருக்கான் ; ஒரு பாட்டு எழுதிட்டு இவன் கொடுக்குற அலும்பு இருக்கே ! " என இதழின் ஓரத்தில் என்னை வைது கொண்டிருப்பவர்களுக்கு, என்னுடைய அம்மாசிக்கு ( அம்மம்மா) இப்பாடலை ஒலித்துக் காண்பித்தேன். ' நான் படாத தாலாட்டா?' என சொல்லிக்கொண்டே கேட்க ஆரம்பித்தவர்கள், " நல்ல தாண்டா இருக்கு; உன் பொண்டாட்டிக்கு வேலை மிச்சம்" என சொல்லிச் சென்றாகள் ! அன்பார்ந்த அருமை நண்பர்களே ! இது ஒன்னு போதாதா ஐயா அலும்பு கொடுக்க ?


உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழுள்ள பிளாக்கர் கருத்துப்பெட்டி அல்லது முகப்புதுகக் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, November 3, 2012

அறுவை சிகிச்சை !


Copyright - http://www.dinodia.com



ன்றோ கிறுக்கிய கவிதை ; சில தினங்களுக்கு முன்பு தான் அதன் அர்த்தம் புரிந்தது. கால ஓட்டத்தில் மனிதன் கடவுளுக்கு ( என்னைப் பொறுத்தவரையில் இயற்கையும் கடவுளும் ஒன்றே ! ) செய்யும் மன்னிக்கப்படாத துரோகம் மரம் வதை செய்தல் ! இப்புகைப்படத்தைப்  பார்க்கும் பொழுது சிதறிய வரி(லி )கள் ! .

மானிடா !
மண்ணுக்கும் விண்ணுக்கும்
மருத்துவம் பார்க்கும் என்னை - ஏனடா
அறுவை சிகிச்சை செய்து
அடக்கம் செய்கிறாய் ?



கொசுறு கவிதை : மரம் மனிதனிடம் பேசுவது போல் 'மரம் பேசுகிறது' என்னும்  கவிதை சில பல வருடங்களுக்கு முன்பு எழுதிய ஞாபகம் . நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள் . வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு மரமெனும் உங்கள் சந்ததியினருக்காக நட்டுச்செல்லுங்கள்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...