Showing posts with label திண்ணை. Show all posts
Showing posts with label திண்ணை. Show all posts

Thursday, May 26, 2011

எங்கே போனது திண்ணை ?

Copyright : xavi.wordpress.com


" வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா 
வழிப்போக்கன் வந்துதான் தங்கி செல்லுவான் சும்மா "  

என்ற நா.முத்துகுமாரின் வரிகளைக் கேட்ட பொழுது தான் சுரீர் என்று உரைத்தது. நம் கலாச்சாரம் காலத்தால் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று.எவனோ ஒரு வழிபோக்கனுக்காக தன் இல்ல வடிவமைப்பில் இடம் கொடுத்த தமிழனின் கட்டடக்கலைக்கு முன்னால் உலக அதிசயங்களும் எனக்கு அற்பம் தான்.இன்றைய சூழலில் எங்கேனும் திண்ணை வைத்த வீடுகளை நான் பார்க்க நேர்ந்தால் அதிசயிப்பது உண்டு.

சிறு வயதில் என் அம்மாச்சி வீட்டிற்கு செல்லும் போது இத்திண்ணைகளின் தரிசனம் எனக்குக் கிட்டும். அந்த இளம் பருவத்தில் எங்கள் பொழுதுபோக்குகள் அனைத்தும் இத்திண்ணையில் தான். அங்கு தான் நான் தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி போன்ற கிராமத்துக்கு உரித்தான விளையாட்டுகளை நான் விளையாடியதுண்டு. என்னுடைய் அழுகையையும் ஆனந்தத்தையும் திண்ணையோடு பகிர்ந்து கொண்ட காலமது.சில சமயங்கள் நான் ஊருக்கு செல்லும் பொது அந்த கால சாகுபடிக்கு ஏற்ப நெல்லோ, கம்போ, பருத்தியோ, உளுந்தோ ... மூட்டைகளாக அடுக்கப்பட்டிருக்கும். அப்பொழுது எல்லாம் அந்த மூட்டைகளின் மேல் எனக்கு கோபம் கோபமாக வரும் . பிறகென்ன, எங்களுக்கான இடம் பறிக்கப்பட்டால் கோபம் வராதா ?

ம்மாச்சி வீட்டிற்கு உறவினர்கள் அதிகம் பேர் சென்றிருந்தார்கள் என்றால், பெண்கள் எல்லாம் உள்ளே ; ஆண்கள் எல்லாம் திண்ணையில் தான். அன்று அளவறியா சந்தோசத்தில் நானும் என் சகாக்களும் இருப்போம். அதன் காரணம் ஏன் என்று இன்று வரை நான் அறியேன்.மாலைப்பொழுதுகளில் , திண்ணையில், அத்தை மடியில் தலைவைத்துத் தெருவில் செல்பவர்களை வேடிக்கை பார்ப்பது என் சிறு வயது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.அப்பொழுது எதிர்வீட்டு திண்ணைகளில் வயசான பெருசுகள் தத்தம் பழங்கதைகளைச்  சொல்லிக்கொண்டிருக்கும். அப்படி என்னதான் அவர்கள் பேசுவார்கள் என்று அந்த வயதில் நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அதனால் தான் என்னவோ அரட்டையடிக்கும் பல வலைப்பூவிற்கும், ஞானி போன்ற எழுத்தாளர்களின் வலைத்தளங்களிலும் " திண்ணை " என்ற சொல் துரிதமாய் பயன்படுத்தப் படுகிறது." திண்ணைப்பள்ளிக்கூடங்கள் " தென்னிந்தியாவில் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. திண்ணைகள் நம் கலாச்சாரத்தின் எச்சம்.

சில மாதங்களுக்கு முன்பு நான் " தக்க்ஷின் சித்ரா " சென்றிருந்த போது செட்டிநாட்டுத் திண்ணைகளைப் பார்த்தேன். எனது நண்பர்கள் உள்ளே செல்ல நான் மட்டும் அந்த திண்ணையில் அமர்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதின் பாதையில் நடந்துவிட்டு சென்றன. சன்னல் ( MICROSOFT WINDOWS ) வழியே உலகைப் பார்க்கும் என் போன்ற இளைய சமூகத்திற்கு திண்ணைகள் தூரம் தான்.தனைப் படிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ! எங்கேனும் திண்ணையை நீங்கள் கண்டால் ஐந்து நிமிடம் அமர்ந்து விட்டு செல்லுங்கள்.

" உறவுகள் மறந்த உலகில் உறவுகளை உணர்வீர்கள் "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...