|
Copyright : fotografia.facilisimo.com |
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள
தர்மங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம்
கோடி அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - மகாகவி "
என்று என்றோ சொல்லி விட்டான் பாரதி. உண்மை தான்; ஒருவனுக்குக் கல்வி தருவதன் மூலம் அவனுக்கு மட்டுமல்ல, அவனைச் சார்ந்த உறவுகளுக்கும், அவனைப் போன்றோர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூகத்துக்கும் நன்மை செய்ய இயலும். ஆனால், ஏட்டுச் சுரைக்காய் என்பது மட்டும் போதுமா ?
'
அ, ஆ' மட்டுமே சொல்லித்தரும் கல்வி முறையில் 'ஆப்பிள்' நிறுவனத்தைப் பற்றி அவன் எவ்வாறு அறிந்து கொள்வான் ? பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த பின்புதானே இங்கு பலருக்கும் ( நான் உட்பட ) சமுதாயம் குறித்த கண்கள் திறக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அவன் எவ்வாறு தனக்குப் பிடித்தத் துறையைத் தேர்வு செய்ய இயலும் ? இதற்கான விடைகளைத் தருகின்றனர் இந்த 'இளைய தலைமுறை'யினர்.
பாடப்புத்தகங்கள் மட்டும் தான் அறிவை வளர்க்கும் என்ற மூடநம்பிக்கைதானே, இந்தப் பிற்போக்கான, அடித்தளமற்ற, சுயமாய் சிந்திக்க சக்தியற்ற இளைய சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அறிவை வளர்க்கும் மற்ற புத்தகங்களை பெற்றோர்களும், பள்ளிகளும் அவனுக்கு அறிமுகம் செய்வதே இல்லை. அப்படியே ஓரிருவர் அறிமுகம் செய்தாலும், அது பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களாகவே இருக்கின்றன. ஏன் ! நாளிதழ்கள் உட்பட ஆங்கிலம் தானே முன்னுரிமை பெற்று வருகின்றது.
'
ஹாரி பாட்டர்' ஐக் கொண்டாடும் இந்தச் சமூகம் அவனுக்கு 'பொன்னியின் செல்வன்' பற்றிக் கூற மறுக்கிறது. பிறகு எப்படி அவனுக்கு தமிழ்மொழி மீது ஆர்வம் ஏற்படும். வேலை தராத, அறிவுக்குதவாத, தேவையற்ற மொழியாகப் பாவிக்கப்படும் ஒரு மொழி மீது அவனுக்கு எப்படி மதிப்பும், மரியாதையும் அதனோடு அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஞானமும் தோன்றும். அத்தகைய சூழலை மனதில் கொண்டு, திறமைமிக்க இளம் எழுத்தாளர்களை, தமிழைப் பாரமாக நினைக்கும் சமூகத்தில் இருந்து உருவாக்க வேண்டும் என அடியெடுத்து வைத்திருக்கிறது 'புகற்சி பதிப்பகம்'.
இருவேறு அமைப்புகளும், 'நாகரீகம் என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் தகவல் தொழில்நுட்ப (IT) நண்பர்களால் முன்னெடுத்து நடத்தப்படுகின்றது. நான் பள்ளி பயிலும் காலங்களில், ஒருவேளை இந்த இரு அமைப்புகள் இருந்திருந்தால், 'மருத்துவன்' என்றல்லாமல் 'எழுத்தாளன்' ஆகியிருப்பேன். என்னுடையப் புத்தகங்களைப் புகற்சி பதிப்பகமும் வெளியிட்டிருக்கும்.
இளைய தலைமுறை :
|
Copyrighted logo of IT |
இவர்கள் பள்ளிதோறும் சென்று, எதிர்கால வேலைவாய்புகள் குறித்தும், எவ்வாறு நம் சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் கருத்தரங்குகள், போட்டிகள் மூலம் ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருகின்றனர். அதனோடு மட்டுமல்லாமல், மாதம் ஒருமுறை செய்தி மடல் (Newsletter) வெளியிடுகின்றனர். அது கூடிய விரைவில் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்து வருகின்றனர். சாதனை செய்யத் துடிக்கும் இந்த இளைஞர்களுக்கு உங்கள் உதவி பணமாகவும் இருக்கலாம் அல்லது அறிவாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும், உங்கள் பெயரன் பெயர்திகளுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் அறிவுச்சொத்தாக இந்த இளையதலைமுறை இருக்கலாம்.
தொடர்பு :
முகப்புத்தக முகவரி :
Ilaiya Thalaimurai
மின்னஞ்சல் முகவரி : ilaiyathalaimurai@outlook.com
கைப்பேசி எண்கள் : 9731262058,9789040980
செய்திமடல் தரவிறக்கம் செய்து கொள்ள :
STUGAZINE
புகற்சி பதிப்பகம் :
|
Copyrighted logo of FFP |
திறமைமிக்க இளம் எழுத்தாளரா நீங்கள் ? கல்கியும், சுஜாதாவும் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என உங்கள் உள்மனம் உங்களை இம்சிக்கிறதா ? இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். திறமை மிக்க உங்கள் படைப்புகளை இந்த உலகம் கொண்டாட உங்களுக்கு மேடை அமைத்துத் தரும் வேலையை இந்த நண்பர்கள் செய்து வருகிறார்கள். பணமாகவும், தமிழாகவும் இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் இவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு :
வலைத்தள முகவரி :
Fresh Face Publications
மின்னஞ்சல் முகவரி : freshfacepublication@gmail.com
கைப்பேசி எண்கள் : 08008790704, 09994436138.
புத்தகங்களைப் பெற :
CLICK HERE
|
Copyright : http://browseideas.com |
இந்த இரு அரசுசாரா பொது நிறுவனங்களும் வெற்றிகளும், மாலைகளும், பாராட்டுகளும், பரிசுகளும், பெறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த இரு சிறு கற்களும், நம் சமுதாயக்குளத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி .
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100.