Tuesday, April 16, 2013

நண்பனுக்காக !

Copyright : blog.hirschi.se

 குறிப்பு : இக்கவிதை என் பள்ளிகால தோழன் அருணனுக்காக எழுதப்பட்டது . இது தன் நண்பனைப் பற்றி கவிதை எழுத துடிக்கும் கவிஞனுக்கும் அவன் கைகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைக்கப்பட்டது. அவனுடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அதிகம் ஊர் சுற்றியதில்லை; அதிகம் பகிர்ந்ததில்லை; அதிகம் சண்டையிட்டதில்லை; இருப்பினும் ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போன்ற ஒரு நண்பன் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை.

யாராருக்கோ
கவிதை எழுதிய என்
கைகள் 
உனக்காக எனும் போது ...
சுருங்கிக் கொண்டது.

கேட்டேன் கைகளை ...
கேள்விக் கணைகளால்.

என் கணை செல்லும் முன்னே
மறு கணை வந்தது.

முதலில் என் கேள்விக்கு பதில் ...
கேள்!

கவிஞனுக்கு தற்பெருமை அழகா?
அசிங்கம்.

நீ கவிஞனா?
காலம் பதில் சொல்லும்.

யாருக்காக இந்த கவிதை?
நண்பனுக்காக.

பெயர்?
அருணன்.

அர்த்தம்?
சூரியன்.

எதற்காக இக்கவிதை?
பார்க்காத நான்
பார்ப்பதே அவன் எழுத்துக்கள் மட்டும் தான்
அந்த எழுத்துக்கள் பிறப்பதற்காக
என் எழுத்துக்கள்.

நண்பனென்றால்?
உயிர்.

உனக்கு?
எனக்கும் அப்படித்தான்.

செய்வாயா உன் நண்பன் சொல்வதை?
வீணான கேள்வி.

காரணம்?
உயிர் சொல்வதைத் தானே உடல் செய்யும்.

பிடித்தது?
யாரிடம்.

அவனிடம்?
மரியாதை ...

மன்னிக்கவும். அவரிடம்?
எல்லாம்.

பிடிக்காதது?
எல்லாம்.

உயிரைத் தருவாயா உன் நண்பனுக்காக?
உயிரே அவன் என்கிறேன்.

நட்பைப் பற்றி ஒரு கவிதை ?
அன்பைத் தருவாள் அன்னை
அனுபவம் தருவார் தந்தை
அறிவைத் தருவார் ஆசான்
உள்ளம் தருவாள் மனைவி
புகழைத் தருவான் பிள்ளை
இவை அனைத்தும் தருவான்
"நண்பன்"

நண்பனுக்காக?
வாழ்வேன்.

நண்பனில்லாமல்?
வீழ்வேன்.

உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
உலகில் தாழ்ந்தது  உன் கேள்வி.            

உன் கேள்வி?

ஏன் கவிதை எழுதாமல் சுருங்கினாய்?
மடையா!
உன் மனதில் உன் நண்பன்
அவன் மனதில் நீ !
இருவரும் ஒருவரே ..

உடலால் வேறுபட்டாலும் 
உள்ளத்தால் ஒருவரே !

சுற்றி வளைக்காதே ...
பதில் கூறு .

கடைசியாக ஒரு கேள்வி?
கேள்.

கவிதை தோன்றுமிடம்?
உள்ளம்.

உள்ளம் ஒன்று எனும் போது
உன் நண்பனை பற்றிய கவிதை என்பது...
உன்னைப் பற்றியாகாதா?
தற்பெருமை ஆகாதா?
கவிஞனுக்கு அழகா?
போதுமா விளக்கம்.

புரிந்தது .
மன்னித்து விடு.

என் வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு...
என் வணக்கங்கள் உங்கள் நட்பிற்கு.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


1 comment:

  1. அசத்தல் கேள்விகள் & பதில்கள்... பாராட்டுக்கள்...

    மிகவும் ரசித்தது :

    /// உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
    உலகில் தாழ்ந்தது உன் கேள்வி ///

    நட்பு தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...