Labels
- கவி சிந்திய மைத்துளிகள்
- சினிமா சிரிமா
- டிவி பொட்டி
- ட்வீட்ஸ்
- பக்கம் பக்கமாய்
- படித்ததில் பிடித்தது
- முகங்கள்
Showing posts with label கவி சிந்திய மைத்துளிகள். Show all posts
Showing posts with label கவி சிந்திய மைத்துளிகள். Show all posts
Saturday, November 14, 2015
Tuesday, September 2, 2014
மோதிரம்
சில பல காலங்களுக்கு முன்பு, புகைப்படங்களுக்குக் கவிதை எழுதி வந்தேன். அதை, ஞாபகம் வைத்து தோழி சரண்யா, இந்த புகைப்படத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதோ அது உங்கள் முன்னே !
உனைக் காணா வேளையில்
நான் கடிக்கும் ஆறாம் விரல்
மோதிரம்.
மோதிரத்தின்
வெற்றிடமாய்
என்னுள்ளம் தானிருக்க ...
தினம்
தினம் நிரப்புகிறாய்
விரலால் ...
விழியால் ..
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Monday, July 28, 2014
இதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்
முன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
இசை : உமாசங்கர்
வரிகள் : மரு.சத்தியசீலன்
இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்
படத்தின் சுட்டி : https://www.youtube.com/watch?v=UstJCj5r2dw
தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
சிநேகம் உன்னோடு
யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே
எந்தன் கண்ணோடு
மொழியிழந்தேன் திரிந்தேன்
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
( ஹம்மிங் )
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
காதலே ....
( ஹம்மிங் )
என் தேடல் பிழை நீ
மழை தேடும் முகில் நீ - நான்
கிறுக்காத கவிதைகள் நீ
என் தோளில் விழும் நீ
மடியில் எழும் நான் - உன்
ஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல்.
எங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும்
காதலில் உனை நனைப்பேன்
நரைகள் விழுந்தாலும் பிறைகள் தேய்ந்தாலும் - உன்
காலடி நான் கிடப்பேன்.
( ஹம்மிங் )
( ஹம்மிங் )
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Tuesday, August 20, 2013
நம்ம திருச்சி !
http://www.123photography.co.uk |
வாடா மச்சி ! – இது
நம்ம திருச்சி
வாடா மச்சி ! மச்சி ! – இது
நம்ம திருச்சி.
சோழனுக்கு சோறு போட்ட உறையூரு – இங்கு
சொல்லாம கொல்லாம கிடக்குது பாரு.
சத்தம் எங்கும் ஏறிப்போச்சு தமிழ்நாட்டுல – நீ
சந்தோசமா வாழலாம் எங்க ஊருல .
தீவு போல இருக்குது பார் ஸ்ரீரங்கம் – இது
காவிரியும் கொள்ளிடமும் கொஞ்சும் இடம்.
ஒரு முறை ஏறி வாடா மலைக்கோட்டை – உன்
உச்சி முதல் பாதம் வரை ஆயுள் ரேகை !
எங்க ஊரு தி-நகரு தில்லைநகரு – இங்கு
ஏராளமா கொட்டிக்கிடக்கு ரொம்ப பிகரு.
பொண்ணுங்க பப்புல மப்புல திரிவதில்லை – நீ
கைநீட்டிக் கூப்பிட இது சென்னையில்லை!
காந்தி வந்து தொறந்து வச்ச மார்கெட்டு – இங்கு
காணும் முகம் ஒவ்வொன்னிலும் கலாம் லுக்கு.
சுஜாதா, வாலியெல்லாம் நம்ப ஊருட – இவங்கள
படிக்காதவன் மனுசனில்லை நீயும் கேளுடா !
-சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100
Wednesday, May 29, 2013
மாடர்ன் தத்துவப் பாடல் !
குறிப்பு : இந்த பாடல் (?) 'இளையதலைமுறை' STUGAZINE இரண்டாவது செய்திமடலுக்காக எழுதிய தத்துவப்பாடல் !!! ??? செய்தி மடலைத் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும். இளையதலைமுறை அரசு சாரா பொது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
பல்லவி:
அட இங்க பாரு ! அங்க பாரு !
இவன பாரு ! அவன பாரு !
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு மாப்புள - நீ
சொந்தமா சிந்திச்சிடு கொஞ்சம் கேப்புல.
சரணம்:1
காந்தி போல வாழ்ந்த காலம் போயே போச்சு - நீ
கேட்ஸ் அ போல அழுத்தி பாரு கணினி மௌசு.
ஆமை முயல் காலமெல்லாம் மாறிப் போச்சு - இங்கே
பத்து முயல் ஓடுது பாரு - ஓடு பாஸு !
சரணம்:2
சிரிச்சு பேசும் மனசுக்குள்ள ஆயிரம் தூசு - நீ
சிந்திக்காம பேசிட்டீனா போயிடும் மவுசு.
அம்மா அப்பா வாத்தியாரு கடவுளு தாண்டா - உனக்கு
கஷ்டம் வந்தா வந்து நின்னா நண்பேன் தாண்டா !
சரணம்:3
கண்ணு முழி பிதுங்க நீயும் படிப்ப புக்ஸு - அட
கண்ண நீயும் தொறந்து வச்சா உலகமே புக்கு ! - நீ
காசு பணம் வச்சிருந்தா கடவுளு இல்ல - மனுஷ பய
கண்ணீர தொடச்சு விட்டா மரணமே இல்ல !
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Friday, May 3, 2013
பெர்பெக்ட் பெண்ணே !
© www.tumblr.com |
குறிப்பு : சில சமயம் என்ன தான் நாம் மாங்கு மாங்கு என்று யோசித்து வெண்பா, கலிப்பா , வஞ்சிப்பா என எல்லாம் கரைத்து எழுதினாலும் அது ஹிட் அடிப்பதில்லை. கொஞ்சம் லோக்கலாக 'ஒய் திஸ் கொலவெறி' போல் எழுதினால் தான் நம்மையும் கவிஞர் என இந்த தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்கிறது. மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே ! இது குறித்த எனது அறிவுக்கண்ணை திறந்து வைத்த நண்பன் பிரவீன் அவர்களுக்கு இக் கவிதை(?) சமர்ப்பணம். இதனை ஒரு பாடலாக வடிவமைத்துத் தராமல் காலந்தாழ்த்தும் அன்பு நண்பர், இசை வித்தகர், 'கசப்பு இனிப்பு', 'தி லாஸ்ட் பாரடைஸ்' போன்ற ஹிட் அடித்த குறும்படங்களுக்கு இசை அமைத்த திரு.உமாசங்கர் அவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். மேலும் நீங்கள் , சூப்பர் சிங்கர் கனவின் முதல் கட்டமான பாத்ரூம் சிங்கர் பதவியில் தற்பொழுது இருந்தால், இப்பாடலை ஆண்ட்ரியா பாடிய ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' படத்தின் ப்ரோமோ பாடல், ' க்ரேசி மின்னல்' பாடலோடு பொருத்திப் பாடி மகிழலாம். இப்பாடல் கண்டு சமீப கால தனுஷ் போன்ற கவிஞர்கள் கோபம் கொண்டால், என்னை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெர்பெக்ட் பெண்ணே
பைத்தியம் நானே
உன்னாலே சுத்தி சுத்தி
காதல் கிறுக்கன் ஆனேன் !
உன் விழி ஓரம்
ஒரு துளி கண்டேன்
கண்ணீரா கவிதையா
குழம்பி நானும் நின்றேன்.
நீ செல்லும் ஸ்கூட்டி தனில்
நானும் சேர வேண்டும்
சொர்க்கங்கள் திருமணங்கள்
அங்கு நிச்சயம் ஆகும்
நீ போடும் சட்டை கலரில்
நானும் சட்டை போட்டேன்
சண்டைகள் போதும் அன்பே - நீ
காதல் செய்ய வேண்டும்
காபிஷாப்பில் க்ரீடிங் கொடுத்தேன்
பஸ்ஸ்டாப்பில் தினமும் பட்ரோஸ் கொடுத்தேன்
பர்த்டே எல்லாம் பரிசுகள் கொடுத்தேன்
பாரின் சரக்கும் உனக்காக தவிர்த்தேன்.
பெர்பெக்ட்பெண்ணே
பைத்தியம் நானே
பாரடி! பேசடி!
பாவம் நானும் தானடி!
பிரெண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ணி விட்டேன் - உன்னோட
பிரெண்ட்சை நானும் மதிக்க கற்றேன்
ஜாக்கி தெரியும் பேண்டை வெறுத்தேன்
சாமியார் போல உன் சரணம் படித்தேன்.
எங்கேயோ கிடந்த என் கைபேசி எல்லாம்
பாக்கெட்டை விட்டு எங்கும் நகருவதில்லை
சாரி பலவும் லவ் யூ சிலவும
டெம்ப்லேட்டில் தினமும் உனக்காக சேர்த்தேன்
காதல் கலவும்
காயம் தரவும்
காதல் இதுவா - என
கண்கலங்கி நின்றேன்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Tuesday, April 16, 2013
நண்பனுக்காக !
Copyright : blog.hirschi.se |
குறிப்பு : இக்கவிதை என் பள்ளிகால தோழன் அருணனுக்காக எழுதப்பட்டது . இது தன் நண்பனைப் பற்றி கவிதை எழுத துடிக்கும் கவிஞனுக்கும் அவன் கைகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைக்கப்பட்டது. அவனுடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அதிகம் ஊர் சுற்றியதில்லை; அதிகம் பகிர்ந்ததில்லை; அதிகம் சண்டையிட்டதில்லை; இருப்பினும் ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போன்ற ஒரு நண்பன் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை.
யாராருக்கோ
கவிதை எழுதிய என்
கைகள்
உனக்காக எனும் போது ...
சுருங்கிக் கொண்டது.
கேட்டேன் கைகளை ...
கேள்விக் கணைகளால்.
என் கணை செல்லும் முன்னே
மறு கணை வந்தது.
முதலில் என் கேள்விக்கு பதில் ...
கேள்!
கவிஞனுக்கு தற்பெருமை அழகா?
அசிங்கம்.
நீ கவிஞனா?
காலம் பதில் சொல்லும்.
யாருக்காக இந்த கவிதை?
நண்பனுக்காக.
பெயர்?
அருணன்.
அர்த்தம்?
சூரியன்.
எதற்காக இக்கவிதை?
பார்க்காத நான்
பார்ப்பதே அவன் எழுத்துக்கள் மட்டும் தான்
அந்த எழுத்துக்கள் பிறப்பதற்காக
என் எழுத்துக்கள்.
நண்பனென்றால்?
உயிர்.
உனக்கு?
எனக்கும் அப்படித்தான்.
செய்வாயா உன் நண்பன் சொல்வதை?
வீணான கேள்வி.
காரணம்?
உயிர் சொல்வதைத் தானே உடல் செய்யும்.
பிடித்தது?
யாரிடம்.
அவனிடம்?
மரியாதை ...
மன்னிக்கவும். அவரிடம்?
எல்லாம்.
பிடிக்காதது?
எல்லாம்.
உயிரைத் தருவாயா உன் நண்பனுக்காக?
உயிரே அவன் என்கிறேன்.
நட்பைப் பற்றி ஒரு கவிதை ?
அன்பைத் தருவாள் அன்னை
அனுபவம் தருவார் தந்தை
அறிவைத் தருவார் ஆசான்
உள்ளம் தருவாள் மனைவி
புகழைத் தருவான் பிள்ளை
இவை அனைத்தும் தருவான்
"நண்பன்"
நண்பனுக்காக?
வாழ்வேன்.
நண்பனில்லாமல்?
வீழ்வேன்.
உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
உலகில் தாழ்ந்தது உன் கேள்வி.
உன் கேள்வி?
ஏன் கவிதை எழுதாமல் சுருங்கினாய்?
மடையா!
உன் மனதில் உன் நண்பன்
அவன் மனதில் நீ !
இருவரும் ஒருவரே ..
உடலால் வேறுபட்டாலும்
உள்ளத்தால் ஒருவரே !
சுற்றி வளைக்காதே ...
பதில் கூறு .
கடைசியாக ஒரு கேள்வி?
கேள்.
கவிதை தோன்றுமிடம்?
உள்ளம்.
உள்ளம் ஒன்று எனும் போது
உன் நண்பனை பற்றிய கவிதை என்பது...
உன்னைப் பற்றியாகாதா?
தற்பெருமை ஆகாதா?
கவிஞனுக்கு அழகா?
போதுமா விளக்கம்.
புரிந்தது .
மன்னித்து விடு.
என் வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு...
என் வணக்கங்கள் உங்கள் நட்பிற்கு.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Monday, April 15, 2013
இப்படியும் ஒரு புத்தாண்டு !
Copyright : Flickr |
குறிப்பு : கிறுக்கல்களைப் படம் பிடித்துச் சென்றுள்ள பத்தாயிரம் கண்களுக்கும் மற்றும் தமிழை நேசிக்கும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ் வாழ்த்து சொல்ல ஆங்கில அட்டைகள்
ஜீன்ஸ் அணியும் தமிழன்னைகள்
தமிழ் பேச மறந்த தமிழர்கள்
மம்மி என்று சொல்லும் மழலைகள்
தமிழே அறியாத நடிகையின் பேட்டி
தமிழ் மணக்காத செம்மொழி மாநாடு
காமக்காட்சிகள் அரங்கேறும் செம்மொழிப் பூங்கா
அறிவுப்புகளெல்லாம் ஆங்கிலத்தில்
தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு தமிழில் பெயர் வைத்தால்
தமிழனைக் கொன்று குவித்தோம் ஈழத்தில்
தைக்கும் சித்திரைக்குமாய் தத்தளிக்கும் புத்தாண்டு
தைக்கும் சித்திரைக்குமாய் தத்தளிக்கும் புத்தாண்டு
இருந்தும் உணர்வற்றுக் கொண்டாடுகிறோம் ;
இனிய தமிழ்ப் புத்தாண்டு !!!
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Thursday, April 11, 2013
சிந்தி விடாதே !
Copyright : www.loverofsadness.net |
அடி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்
இதயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.
வழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என்
இதயத்தின் நீரெல்லாம்
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி
கண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.
சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Wednesday, April 10, 2013
நான் பெண்
Copyright : photo2000.blogspot.com |
விளக்கு அணைக்கப்படுகிறது;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.
விளக்கு பிரகாசிக்கிறது;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.
விளக்கு முக்கியமில்லை;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.
பரத்தை - நடிகை - மனைத்துணை.
*பரத்தை - விலைமகள்
*மனைத்துணை - மனைவி.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Thursday, April 4, 2013
நட்புக்காக ஒரு பெக்
Copyright : commons.wikimedia.org |
கொஞ்சம் தொட்டுவிடும் தான்.
என்று ஆரம்பித்தது எங்கள் உறவு என சரியாகத் தெரியவில்லை
கல்லூரிக் காலமாக இருக்கலாம்.
எவனோ ஒருவன் அறிமுகம் செய்து வைத்தான் .
என்றாலும் இத்தனை நெருக்கம்
எனக்கே ஆச்சரியம் தான்.
அவன் எனக்கு நண்பன் - ஆம்
அவனிடம் மட்டும் தான் நான் உண்மையாக இருந்துள்ளேன்.
காதல் கசக்கும் போதும்
கண்ணீர் பெருகும் போதும்
அவனுடன் தான் நான் இருப்பேன்.
சில சமயம்
பள்ளிகாலச் சொந்தங்களோ
கல்லூரிக்காலப் பந்தங்களோ வந்தால்
இவனையும் அழைத்துச் செல்வதுண்டு.
பெரும்பாலும் இவனைத் தெரியாதவர்கள் இல்லை.
தெரியாதவர்களுக்கு இவனை அறிமுகம் செய்ய
நான் மறந்ததில்லை.
மனைவி வந்த போதும்
மகள்கள் பிறந்த போதும் - எங்கள்
நட்பில் மட்டும் மாற்றமில்லை.
அவர்களுக்கு இவனைப் பிடிக்காது.
'என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்' எனக் கூறியுள்ளார்கள்.
'சீ ... போடி'
உன்னை மணக்கும் முன்பே
அவனை எனக்குத் தெரியும்.
நட்பில் விஷம் கலக்காதே - என
நா தெறிக்க வசை பாடியதுண்டு.
இப்படியாக எங்கள் நட்பு
காலங்காலமாக தொடர்ந்தது.
கண்ணதாசனும் கவிதையும் போல.
இதோ இன்று நான் இறந்து விட்டேன்.
' என்னை அவன் தான் கொன்றான்' என
என்னைச் சார்ந்த சமூகம் சொல்கிறது.
எனக்கும் சிறு சந்தேகம் தான்.
ஏனெனில் இன்று என் இறப்புக்கு அவன் வருந்தவில்லை.
ஓரத்தில் ஒரு புது நட்பு பிடித்திருக்கிறான்.
என்னை போலவே அவனும் இருக்கிறான்.
கையில் அவனைச் சுமந்தபடி.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Tuesday, March 26, 2013
சிறு கதையாய் சில கவிதைகள்
கண்ணதாசனின் கட்டில் குழந்தை
Copyright : Nilacharal.com |
கண்ணதாசன் கட்டிலில்
கண்ணயர்ந்த கைக்குழந்தை
கண்ணயர்ந்த கைக்குழந்தை
கண்விழித்தபின் கூறியது.
" அகரம் - எனக்கு அவள் கரம்."
கவிஞர்கள் வீழ்வதுண்டு ;
" அகரம் - எனக்கு அவள் கரம்."
கவிஞர்கள் வீழ்வதுண்டு ;
கவிதைகள் வீழ்வதில்லை.
விலைமகள்
Copyright : Zedge.com |
பூக்களை வட்டமிடும் பட்டுப்பூச்சியே ! - இந்த
பூவை வட்டமிடும் காரணமென்னவோ ?
காலையில் சிரித்து மாலையில் மூடும் மலரும்
காலையில் சிரித்து மாலையில் மூடும் மலரும்
மாலையில் சிரித்து காலையில் மூடும் இவளும்
ஒன்றெனக் கண்டாயோ ! - அவள்
குறிப்பு
: இக் கவிதை நண்பர்களுடன் பெங்களூரில் இருந்து தொடர்வண்டியில்
திரும்புகையில் ஏற்பட்ட அனுபவத்தைச் சார்ந்து எழுதப்பட்டது. இது யார்
மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. என் வார்த்தைகள் உங்கள்
கண்ணாடி இதயங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
என்ன தான்
மதிப்பு, மரியாதை
பரிதாபம், பாசம்
உங்கள்மேல் இருந்தாலும்....
அத்தனையையும் அழித்து விடுகிறீர்கள் !
ஆடவர்களை* உரசி
அதிகாரமாய்ப் பிச்சைக் கேட்கும்
அத்தனைத் தருணங்களிலும்.
திருநங்கைகளே !
தயவு செய்து வாங்கி விடாதீர்கள் ...
திருவோட்டு நங்கைகள் என்ற பட்டத்தை ?? :-(
* குறிப்பாக கல்லூரி மற்றும் பதின்வயது இளைஞர்கள்.
ஏன்?
Copyright : The Hindu |
குறிப்பு
: இக்கவிதை ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய விளையாட்டு அல்ல என அறிவிப்பதற்கு முன்பு எழுதப்பட்டது.
தாய் தெருவில்
மனைவி மடியில்
ஹாக்கி - கிரிக்கெட் !!!
வரதட்சணை
Copyright : http://lipstickandpolitics.com |
நாமும் ஊமைகள் தான்
திருமணத் திருவிழாக்களில்
வரதட்சணை.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Friday, March 15, 2013
Wednesday, March 6, 2013
Thursday, February 21, 2013
முதல் காதல்
Copyright : Google |
என் முதல் காதல்
அவளோடு ….
யார் அவள்?
நானும் அறியேன்.
பெயர்?
சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்குத் தெரிந்தது .
ஊர்?
எங்கு வேண்டுமானாலும் இருப்பாளாம்.
அவளைப் பற்றி?
நிச்சயமாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவள் தான்.
எப்படி அறிமுகமானாள் ?
மின்னல் ஒளியில் அவள் தெரிந்தாள் – என்
மனதை உடன் பறித்தாள்.
பார்ப்பதற்கு ?
தண்ணீர் முகம்
கூரிய முக்கு
அரை குறை உயரம்
அழகிய உதடு
உதடு கொண்டு என் தாகம் தீர்ப்பாள்
என் உள்ளத்தில் என்றும் அவள் வாழ்வாள்.
எவ்வளவு நாள் காதல்?
விவரம் தெரியும் முன்பிலிருந்தே.
உன் காதல் பரிசு?
முத்தம்.
அவள் பரிசு?
பதில் முத்தம்.
கைப்பேசி காதல்?
அவள் ஊரில் வசதி இல்லை.
பிறகு பேசிக்கொள்வது?
எப்போதாவதுதான்.
விளையாடுவீர்களா?
காகிதக் கப்பல் விடுவதுண்டு.
சத்தமிடுவாளா?
எக்கச்சக்கமாக.
கோபப்படுவாளா?
ம் ….. ம் …..
கோபப்படும் போது – சில சமயம்
கொலையும் செய்வாள்.
அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.
அவளை விட்டுப் பிரியும் பொழுது?
நான் படுத்துக் கொள்வேன் உடல்நிலை சரியில்லாமல் .
யாருக்கேனும் அவளைப் பிடிக்குமா?
குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கும்
எனக்கும் தான்;
பெரியோர்களுக்கு அவள் கசக்கும்
என் பெற்றோருக்கும் தான்.
மாமனார் மாமியார் பார்த்ததுண்டா?
தூரத்திலிருந்து.
அவள் பார்த்ததுண்டா?
என்னைச் சந்திக்க வரும்பொழுது….
என்ன அவள் வருவதைப் பார்த்தால்
இவர்கள் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.
அவளைப் பற்றி கவிதை எழுதியதுண்டா?
அவள் ஒரு கவிதை
அவளைப் பற்றி எழுதாதவன் கவிஞனில்லை.
அவளைப் பார்க்க வேண்டுமே?
ஜன்னல் திறந்து வையுங்கள் – உங்கள்
வாசல் வழி நடந்து போகலாம்.
எப்போது திருமணம்?
பொறுங்கள், மகனைக் கேட்டு சொல்கிறேன்.
மகனா?
இப்பொழுது அவன் தானே அவளைக் காதலிக்கிறான்.
என்ன?
அட, மழையைக் காதலிக்காத மழலை உண்டா?
நானும் காதலித்தேன் அவளை – என்
மழலைப் பருவத்தில்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Thursday, February 7, 2013
நட்புக்கீறல்
Copyright : liaschaf.blogspot.com |
எனக்கும் நண்பர்களுக்கும் சற்று நெருக்கம் அதிகம். அது போல் பிரிவும் அதிகம். பள்ளிக்காலம் தொட்டு இந்தப் பருவக்காலம் வரை பல்லாயிரம் நண்பர்கள். வாழ்க்கையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒருவன். தமையன் என்ற போர்வைக்குள் ஒருவன். தப்பு செய்து பழகிய காலம் தொட்டு ஒருவன். என் தவறுக்கு தண்டனையாக இன்று வரை மௌனத்தைப் பரிசளிக்கும் ஒருவன். முகப்புத்தகத்தில் நலம் விசாரிக்கும் ஒருவன். ஸ்கைப் மூலம் என் நேசம் தொடும் ஒருவன். பார்த்தால் மட்டும் சிரிக்கும் ஒருவன். என் நட்பை நிராகரித்த ஒருவன் என பல பல ஒருவன்களால் இந்த சிறுவனின் உலகம் படைக்கப்பட்டுள்ளது. அசார், காளி, டேவிட் என மதம் தாண்டிய எனது நட்புலகத்தை விரித்தது இந்த முகப்புத்தகமும் வலைப்பூவும் தான். நட்பின் வலியால் வாழும் என்னை சில வாரங்களாக ஆத்மார்த்தியின் நட்பாட்டம் என்னையும் கொஞ்சம் ஆடச்செய்தது. அந்த ஆட்டம் உங்கள் பார்வைக்கு !
அவன் அவள்
இவன் இவள் ஆக
இவனை இம்சிக்கிறது
நட்பு.
நட்பு நட்புதான் !
ஒரு நாள் பேசாவிடின்
காதல் ?
காதல் வலி
கண் மருந்து
நட்பு வலி
நானே மருந்து.
நட்பினை சுவைத்து
காதல் வளர்கிறது;
காதலைச் சுவைத்து
நட்பு வளர்வதில்லை.
நட்பு வளர்வதில்லை.
எச்சில் பார்க்காத
என் உறவு
நட்பு.
ஆடை கலைத்தும்
நட்பு தூங்கும்.
காதல் மட்டும்
காமம் தேடும்.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Sunday, December 30, 2012
ஊட்டி விடாதீர்கள்
Copyright : Harish Mohan Photography |
குறிப்பு : மனதாலும் உடலாலும் காயப்பட்ட அத்தனை பெண் மலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.
சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு
பசும்பால் தோய்த்து - விரலால்
ஊட்டுவாள் - அம்மா .
பழங்களின் தோலுரித்து - அதைப்
பொடியாய் நறுக்கி - நசுக்கி
ஊட்டுவார் - அப்பா.
சாப்பிடுவது எதுவாயினும் - அதை
சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி
ஊட்டுவார் - தாத்தா.
ரொட்டித்துண்டை நீரில் நனைத்து
அதனை அமுக்கி - குழைத்து
ஊட்டுவான் - அண்ணன்.
போதும் உறவுகளே !
இனியும் அவளுக்கு
ஊட்டி விடாதீர்கள்.
வல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்
துடிக்கும் தேசத்தில் - அவள்
தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்
அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;
ஊட்டி விடாதீர்கள்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Sunday, December 23, 2012
என்னை மன்னிப்பாய் தானடி ?
Photo Courtesy : Wolfgang Lüpertz |
முன் குறிப்பு : நேற்று இரவு twilight breaking dawn முதல் பகுதி பார்த்தேன் . பெல்லா எட்வர்டின் மகளைப் பிரசவிக்கும் காட்சி . அதில் என்னைப் பாதித்தது அவள் அல்ல அவன். 'மகளை விட மனைவி தான் வேண்டும்' என்னும் அவனுடைய தவிப்பு. ஆம், இப்படித்தானே ஒவ்வொவொரு கணவனும் ; ஆனால் அது பதிவு செய்யப்படாமலே இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. அதைத் தொடர்ந்தே இக்கவிதை. இது சிறப்பானதாக எனது மனம் கருதவில்லை ! இருக்கலாம் ; என் மகள் பிறக்கும் சமயத்தில் இக்கவிதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்படலாம் !
காதல் கடலில் நீராடி
காமக் கரை தொட்டு விட
கருவில் உதித்திட்டால் பௌர்ணமி
கண்மணியே - நீ சுகம் தானடி ?
வெயிற்கால மழைநாள் ஒன்றில்
வெட்கப்புன்னகை நீ சிந்த - எடுக்கச் சென்ற
என்னிதழை எச்சில் படுத்தி சொன்னாயடி
என்னுயிரே - நீ நலம் தானடி ?
தேகமெல்லாம் நீ வாடும் போதும்
தென்றல் வந்து உன்னை தீண்டும் போதும்
தேகப்போர்வை நெய்வேனடி
தேவதையே - நீ சவுக்கியம் தானடி ?
மேடிட்ட வயிற்றில்
மெதுவாய் விரல் தீண்டி
முத்தமிட்டுச் சென்றேனடி
மென்பூவே - நீ பத்திரம் தானடி ?
வலியோடு என் விரல் பிடிக்க
மழலையவள் மண் பிறக்க
செத்து விட்டேன் நானடி
செந்தாமரையே - என்னை மன்னிப்பாய் தானடி ?
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Subscribe to:
Posts (Atom)