Copyright : Google |
என் முதல் காதல்
அவளோடு ….
யார் அவள்?
நானும் அறியேன்.
பெயர்?
சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்குத் தெரிந்தது .
ஊர்?
எங்கு வேண்டுமானாலும் இருப்பாளாம்.
அவளைப் பற்றி?
நிச்சயமாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவள் தான்.
எப்படி அறிமுகமானாள் ?
மின்னல் ஒளியில் அவள் தெரிந்தாள் – என்
மனதை உடன் பறித்தாள்.
பார்ப்பதற்கு ?
தண்ணீர் முகம்
கூரிய முக்கு
அரை குறை உயரம்
அழகிய உதடு
உதடு கொண்டு என் தாகம் தீர்ப்பாள்
என் உள்ளத்தில் என்றும் அவள் வாழ்வாள்.
எவ்வளவு நாள் காதல்?
விவரம் தெரியும் முன்பிலிருந்தே.
உன் காதல் பரிசு?
முத்தம்.
அவள் பரிசு?
பதில் முத்தம்.
கைப்பேசி காதல்?
அவள் ஊரில் வசதி இல்லை.
பிறகு பேசிக்கொள்வது?
எப்போதாவதுதான்.
விளையாடுவீர்களா?
காகிதக் கப்பல் விடுவதுண்டு.
சத்தமிடுவாளா?
எக்கச்சக்கமாக.
கோபப்படுவாளா?
ம் ….. ம் …..
கோபப்படும் போது – சில சமயம்
கொலையும் செய்வாள்.
அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.
அவளை விட்டுப் பிரியும் பொழுது?
நான் படுத்துக் கொள்வேன் உடல்நிலை சரியில்லாமல் .
யாருக்கேனும் அவளைப் பிடிக்குமா?
குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கும்
எனக்கும் தான்;
பெரியோர்களுக்கு அவள் கசக்கும்
என் பெற்றோருக்கும் தான்.
மாமனார் மாமியார் பார்த்ததுண்டா?
தூரத்திலிருந்து.
அவள் பார்த்ததுண்டா?
என்னைச் சந்திக்க வரும்பொழுது….
என்ன அவள் வருவதைப் பார்த்தால்
இவர்கள் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.
அவளைப் பற்றி கவிதை எழுதியதுண்டா?
அவள் ஒரு கவிதை
அவளைப் பற்றி எழுதாதவன் கவிஞனில்லை.
அவளைப் பார்க்க வேண்டுமே?
ஜன்னல் திறந்து வையுங்கள் – உங்கள்
வாசல் வழி நடந்து போகலாம்.
எப்போது திருமணம்?
பொறுங்கள், மகனைக் கேட்டு சொல்கிறேன்.
மகனா?
இப்பொழுது அவன் தானே அவளைக் காதலிக்கிறான்.
என்ன?
அட, மழையைக் காதலிக்காத மழலை உண்டா?
நானும் காதலித்தேன் அவளை – என்
மழலைப் பருவத்தில்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100