Copyright : Harish Mohan Photography |
குறிப்பு : மனதாலும் உடலாலும் காயப்பட்ட அத்தனை பெண் மலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.
சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு
பசும்பால் தோய்த்து - விரலால்
ஊட்டுவாள் - அம்மா .
பழங்களின் தோலுரித்து - அதைப்
பொடியாய் நறுக்கி - நசுக்கி
ஊட்டுவார் - அப்பா.
சாப்பிடுவது எதுவாயினும் - அதை
சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி
ஊட்டுவார் - தாத்தா.
ரொட்டித்துண்டை நீரில் நனைத்து
அதனை அமுக்கி - குழைத்து
ஊட்டுவான் - அண்ணன்.
போதும் உறவுகளே !
இனியும் அவளுக்கு
ஊட்டி விடாதீர்கள்.
வல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்
துடிக்கும் தேசத்தில் - அவள்
தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்
அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;
ஊட்டி விடாதீர்கள்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100