Copyright : liaschaf.blogspot.com |
எனக்கும் நண்பர்களுக்கும் சற்று நெருக்கம் அதிகம். அது போல் பிரிவும் அதிகம். பள்ளிக்காலம் தொட்டு இந்தப் பருவக்காலம் வரை பல்லாயிரம் நண்பர்கள். வாழ்க்கையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒருவன். தமையன் என்ற போர்வைக்குள் ஒருவன். தப்பு செய்து பழகிய காலம் தொட்டு ஒருவன். என் தவறுக்கு தண்டனையாக இன்று வரை மௌனத்தைப் பரிசளிக்கும் ஒருவன். முகப்புத்தகத்தில் நலம் விசாரிக்கும் ஒருவன். ஸ்கைப் மூலம் என் நேசம் தொடும் ஒருவன். பார்த்தால் மட்டும் சிரிக்கும் ஒருவன். என் நட்பை நிராகரித்த ஒருவன் என பல பல ஒருவன்களால் இந்த சிறுவனின் உலகம் படைக்கப்பட்டுள்ளது. அசார், காளி, டேவிட் என மதம் தாண்டிய எனது நட்புலகத்தை விரித்தது இந்த முகப்புத்தகமும் வலைப்பூவும் தான். நட்பின் வலியால் வாழும் என்னை சில வாரங்களாக ஆத்மார்த்தியின் நட்பாட்டம் என்னையும் கொஞ்சம் ஆடச்செய்தது. அந்த ஆட்டம் உங்கள் பார்வைக்கு !
அவன் அவள்
இவன் இவள் ஆக
இவனை இம்சிக்கிறது
நட்பு.
நட்பு நட்புதான் !
ஒரு நாள் பேசாவிடின்
காதல் ?
காதல் வலி
கண் மருந்து
நட்பு வலி
நானே மருந்து.
நட்பினை சுவைத்து
காதல் வளர்கிறது;
காதலைச் சுவைத்து
நட்பு வளர்வதில்லை.
நட்பு வளர்வதில்லை.
எச்சில் பார்க்காத
என் உறவு
நட்பு.
ஆடை கலைத்தும்
நட்பு தூங்கும்.
காதல் மட்டும்
காமம் தேடும்.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100