Copyright : commons.wikimedia.org |
கொஞ்சம் தொட்டுவிடும் தான்.
என்று ஆரம்பித்தது எங்கள் உறவு என சரியாகத் தெரியவில்லை
கல்லூரிக் காலமாக இருக்கலாம்.
எவனோ ஒருவன் அறிமுகம் செய்து வைத்தான் .
என்றாலும் இத்தனை நெருக்கம்
எனக்கே ஆச்சரியம் தான்.
அவன் எனக்கு நண்பன் - ஆம்
அவனிடம் மட்டும் தான் நான் உண்மையாக இருந்துள்ளேன்.
காதல் கசக்கும் போதும்
கண்ணீர் பெருகும் போதும்
அவனுடன் தான் நான் இருப்பேன்.
சில சமயம்
பள்ளிகாலச் சொந்தங்களோ
கல்லூரிக்காலப் பந்தங்களோ வந்தால்
இவனையும் அழைத்துச் செல்வதுண்டு.
பெரும்பாலும் இவனைத் தெரியாதவர்கள் இல்லை.
தெரியாதவர்களுக்கு இவனை அறிமுகம் செய்ய
நான் மறந்ததில்லை.
மனைவி வந்த போதும்
மகள்கள் பிறந்த போதும் - எங்கள்
நட்பில் மட்டும் மாற்றமில்லை.
அவர்களுக்கு இவனைப் பிடிக்காது.
'என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்' எனக் கூறியுள்ளார்கள்.
'சீ ... போடி'
உன்னை மணக்கும் முன்பே
அவனை எனக்குத் தெரியும்.
நட்பில் விஷம் கலக்காதே - என
நா தெறிக்க வசை பாடியதுண்டு.
இப்படியாக எங்கள் நட்பு
காலங்காலமாக தொடர்ந்தது.
கண்ணதாசனும் கவிதையும் போல.
இதோ இன்று நான் இறந்து விட்டேன்.
' என்னை அவன் தான் கொன்றான்' என
என்னைச் சார்ந்த சமூகம் சொல்கிறது.
எனக்கும் சிறு சந்தேகம் தான்.
ஏனெனில் இன்று என் இறப்புக்கு அவன் வருந்தவில்லை.
ஓரத்தில் ஒரு புது நட்பு பிடித்திருக்கிறான்.
என்னை போலவே அவனும் இருக்கிறான்.
கையில் அவனைச் சுமந்தபடி.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100