Tuesday, May 24, 2011

மன்னிக்கவும் கோகுல் !

Copyright - http://www.keeprelationships.com


குறிப்பு : நண்பர்களுக்குள் ஊடல் வருவது இயல்பு தானே ! அப்படியொரு ஊடல் பொழுதுகளில் உதிர்த்த வரிகள் . நண்பர்களை, அவர்களின் நட்பை புரியாமல் தவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இக்கவிதை . 



நண்பனே - நீ
என் வாழ்க்கையில் 
உன் பகுதியைச் 
சுருக்கிக் கொண்டாய்.
நான் - என் 
வார்த்தைகளை 
உன்னிடம்
சுருக்கிக் கொண்டேன்.
நான்
பேச நினைத்த போது
பேசாமல் விலகினாய் 
நீ
பேச நினைக்கும் போது 
பேச இயலாமல் 
விலகுகிறேன்.

நான் 
உன்னிடம் பலவற்றைப் 
பகிர்ந்து கொள்ள 
விழைகிறேன். 
இன்று தான்
புரிந்தது நீயும்
விழைகிறாய் என்று ...
பகிர்ந்து கொள்ள அல்ல 
பிரிந்து செல்ல

உன்னை இன்னொரு
அருணனாய் நினைத்திருந்தேன் - அதனை
அர்த்தமற்ற அந்தியாய் மாற்றி விட்டாயே !

சுகதுக்கங்களை     
சுதந்திரமாய்
சொல்லுமிடம்
நண்பனுள்ளம்.
அந்த நண்பனிடத்திலேயே 
சுதந்திரமில்லை
பிறகென்ன
அந்த உள்ளத்திற்கு.

நானும் பழகிக்கொண்டேன்
உன்னைப் போல் இருப்பதற்கு...
காலையில் காலை வணக்கம்
மாலையில் மாலை வணக்கம்
முடிந்தது நட்பின் இலக்கணம்.

என்ன தான் 
நடிக்க முயன்றாலும்
தோற்று விடுகிறேன் - உன்
இயல்புக்கு முன்னால் .

உள்ளத்தின் உண்மைகளை
உள்ளத்திலேயே வைத்திருந்தால் 
யாரறிவார் அது உண்மையென்று !

காதலினும் உயர்ந்தது நட்படா ! - நம்
நட்பிற்கு அவ்விடம் இல்லையடா!
காதலில் கூட மறைத்திடலாம் 
நட்பிடம் மறைப்பது அரிதடா !

நான் சொல்வது 
உனக்கு மட்டுமல்ல 
நட்பைப் புரியாத 
அனைத்து நல்லவர்களுக்கும்.
எது எப்படியிருந்தாலென்ன ?
உன் விருப்பம் போல் ...
நண்பனே !
விடை பெறுகிறேன் - என்
வார்த்தைகளைச் சுருக்கிக் கொண்டு . 



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, May 17, 2011

❧ அப்பா ❧

Copyright : ftp.cdc.gov


குறிப்பு : இக்கவிதை என் நண்பன் கோகுலின்  தந்தை எங்களை விட்டுப் பிரிந்த பொழுது எழுதியது. இதுவரை அவனுக்கு நான் இக்கவிதையை அனுப்பி வைக்கவில்லை ! முதல் முறையாக உங்களுக்காக ....


அன்பு நண்பனே!
ஆறுதல் கூற வயதில்லை
இருப்பினும்....
ஆசை - என் 
அன்பு நெஞ்சம் 
ஆழ்ந்த வருத்தத்தில் - நம்
அன்பு அப்பா 
மறைந்த  நினைவினில் ...

என் வார்த்தையால் 
உன்  வருத்தத்தை 
விலக்க இயலா !
நீ
அடைந்த மதிப்பெண்கள் 
படிக்கும் கல்லூரி
பார்க்கும் வேலை
கிடைக்கும் சம்பளம்
வாழ்க்கையின் சந்தோசங்கள் 
யாருக்காக
என்பது
எனக்கு தெரியும்.
எனக்குத் தெரிந்து
என்ன பயன் ?
தெரியவேண்டிய அந்த
தெய்வத்திற்கு
தெரியவில்லையே ! 

நடந்தது நினைத்து 
கண் சிந்தாதே !

நிறைவான சந்தோசமும்
மிதமான கோபமும்
கடின உழைப்பும்
உதவும் மனமும்
உனக்குள் கொள்;
உலகம் உன்னைத் தன
தலையில் கொள்ளும்.

மூத்த மகன் நீ
பொறுப்புகளுக்கு மூத்த மகன்.
பற்றுகோல் நீ
உன் குடும்பத்திற்கு ...
தூணாக விளங்க வேண்டிய நீ    
துவண்டு விடக்கூடாது.
துணிந்து நில்
தூரங்கள் தூக்கிலிடப்படும்;
துன்பங்கள் துன்பப்படும்.

இந்நிகழ்வு கண்டு
வருந்தாதே!
சோகங்கள் மட்டும் தான்
பாடங்கள் புகட்டும்.
சொந்தங்கள்...
பந்தங்கள்...
நண்பர்கள்..
பகைவர்கள்...
அறிந்திருப்பாய் ...
அவர்களைப் பற்றி 
அனைத்தையும்
அறிந்திருப்பாய்.

நிலையான இந்த உலகில்
நிலையில்லாதது நம் வாழ்வு;
நிலையில்லாத வாழ்க்கையில்
நிலையான புகழைத் தேடு.

துன்பங்கள் உன்னைத் தொடும் போது ...
கண்ணை மூடு
கடவுளை நாடு
கவலைகள் விடு
கடமைகள் தொடு    
மனதின் வடு
என்னிடம் விடு 
மற்றவர்  துன்பங்களைத் தாங்கிக் கொள்ள 
நான் ஒன்றும் ஏசுபிரான் அல்ல ....
 
இருப்பினும் தாங்குகிறேன் ,
ஏனெனில் 
நீ எனக்கு மற்றவனல்ல !!!!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

   

Monday, May 9, 2011

இது நம்ம பாட்டு தான் !

Photo Courtesy : Sathyaseelan Rajendran


குறிப்பு : கொஞ்சம் வித்தியாசமான நேரத்துல தான் இந்த கவிதை எழுதுற சூழல் எனக்கு வந்துச்சு. எங்க Batch Day ... எப்பொழுதும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம்னு யோசிச்சோம் . சரி ஒரு பாட்டு compose பண்ணுனா என்னான்னு தொன்றிணப்ப தான் ... இந்த வரிகள் . உங்க Mind Voice எனக்கு புரியுது ! எதுப்பா ? உங்க Batch அப்படின்னு தானே கேக்குறீங்க ! என்னோடது 2006 Batch of Thanjavur Medical College. And I am proud to Say My Batch name ... Ya We are VALIANTZ .


நட்பென்னும் வலையைப் பிண்ணிகொண்டோம்
நட்புக்குள் நாங்கள் மாட்டிக் கொண்டோம்
நட்பாலே நாங்கள் வாழுகின்றோம் - எங்கள்
நட்பாலே பிறரை வாழ வைப்போம்.

நட்புக்கு அகராதி நாங்கள் தானே !
கர்ணனும் எங்கள் சீடன் தானே !
நட்பிற்கு தாஜ்மஹால் கட்டிவிட்டோம் - எங்கள்
கல்லூரி கற்களிலே கலந்து விட்டோம்.

சோகங்கள் கண்ணில் மழை பொழியும் - நண்பன்
கைவிரல் தானே துடைத்துவிடும்;
வெற்றிகள் தலையில் ஏறிக்கொள்ளும் - நண்பன்
குட்டுகள் தானே இறக்கி வைக்கும்.

கனவுகள் மட்டும் காண மாட்டோம் - பலர்
கனவுகள் கனிந்திட வழிவகுப்போம்.
மருத்துவம் மட்டும் பார்க்க மாட்டோம் - பலர்
மனங்களில் மகனாய்/மகளாய் வாழ்ந்திடுவோம்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எந்நாளும் மாறாது இந்தக் கூட்டம்.




-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, May 7, 2011

உன்னைப் பற்றி ...

Copyright : Ganesamoorthy


குறிப்பு - இது என் பள்ளிக் கால நண்பன் கணேசமூர்த்திக்காக நான் 12 வகுப்பு படிக்கையில் எழுதப்பட்டது ! இக் கவிதையை அவனுக்காக மட்டும் அல்ல இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் , என் நட்பை நேசிக்கும் அனைவருக்கும்  சமர்ப்பணம். கல்லூரிப் பெண்கள் கவனத்திற்கு 'HE IS STILL SINGLE' !

அழகின் 
அகராதி

நட்பின்
இமயம்

புறத்தால்
கெட்டவன்

மனத்தால்
தூயவன்

படிப்பில்
பரவாயில்லை

நடிப்பில்
நடிகர் திலகம்

துடிப்பில்
இதயம்

பழகுவதில்
பால்

விலகுவதில்
விலாங்கு

பிடித்தது
காதல்

பிடிக்காதது
துரோகம்

புரிவது
பாசம்

புரியாதது
பாடம்

ஆடைகளில்
ஆணழகன்

இல்லாமல்
பேரழகன்

பேச்சில்
கனிவு

பாட்டில் 
தெளிவு                              

வீட்டில் 
நல்லபிள்ளை

விடுதியில்
கெட்டபிள்ளை      

இன்னும் சொல்ல 
என்னிடம் வார்த்தையில்லை
ஏன்?
தமிழிளுமே வார்த்தையில்லை .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Friday, May 6, 2011

சுமைகள்

Copyright : www.designzzz.com



எத்தனை சுமைகள்
நம் மனித வாழ்வுதனில்...

பிறந்தவுடன்
அரைஞான்கயிறு ஒரு சுமை

ஓர் வயதில்
உடைகள் ஒரு சுமை

1 முதல் 5 வரை
உணவு ஒரு சுமை

5 முதல் 10 வரை
மருந்து ஒரு சுமை

10 முதல் 15 வரை
படிப்பு ஒரு சுமை

15 முதல் 20 வரை
பருவம் ஒரு சுமை

20 முதல் 25 வரை
பணம் ஒரு சுமை

25 முதல் 30 வரை
மனைவி ஒரு சுமை

30 முதல் 35 வரை
மக்கள் ஒரு சுமை

35 முதல் 40 வரை
உறவுகள் ஒரு சுமை

40 முதல் 50 வரை
பழைய பதிவுகள் ஒரு சுமை

50 க்கு மேல்
நாமே ஒரு சுமை

சுமைகளிருந்தாலென்ன
அதை சாதிக்கும்
தகைமை உன்னிடம் உள்ளதன்றோ?
பிறகேன் கவலை!

சுமைகளை 
உடைத்து சூடங்களாக்கி
உன் வெற்றிகளுக்கு 
ஆராதனை காட்டு !

- ஜெயம்
 

 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...