வாருங்கள் மானிடர்களே
வாருங்கள் ....
அடுத்தவர் அவஸ்தையில்
அமிர்தம் உண்ணும்
அன்பற்ற மானிடர்களே வாருங்கள் !
என்ன யோசிக்கிறீர்கள் !
எதற்கு அழைக்கிறான் இந்த
மரமடையன் என்றா ?
பாருங்கள் உங்கள்
பாதத்தின் அடியில்
பாதாளத்தில் பரிதவிக்கும் எம்
புதல்வர்களைப் பாருங்கள் !
அதோ யாரங்கே !
சற்று நிறுத்தப்பா ...
நீ !
அறிவில் ஆதவன் தான்
அதற்காக அந்த
அறிவில்லாதவனை
"மர மடையன்" என்று திட்டதே !
மண்ணோடு காதல் கொண்டு
மழையோடு நட்பு கொண்டு
மாலைத் தென்றலோடு உறவாடும்
நாங்கள் மடையர்களா ? - அல்லது
மண்ணுக்காக மடிந்து
மதுக்காக மானமிழந்து
மாதுக்காக மயங்கும்
நீங்கள் மடையர்களா ?
திருத்திக் கொள்ளுங்கள் உங்கள்
திருவாய் மலர்ந்த வார்த்தைதனை
அவன் 'மர மடையன்' அல்ல
"மனித மடையன்."
ஆண்டு நூறுக்குமுன்
அஸ்தமித்து விடும்
அற்ப மானிடா!
ஆண்டுக்கொரு முறை நீ
அவதரித்த நாளைக் கொண்டாடுகிறாய்.
ஆண்டாண்டு காலமாய் இந்த
அவனியை அலங்கரிக்கும் எங்களுக்கு
“பர்த்டே கேக்” எப்போது செய்யப் போகிறாய்?
தனிக்குடித்தனம் செல்லும்
வாழைகள்....
ஆலைத் தாங்க மறந்த
விழுதுகள்...
முகம் வாடிக் கிடக்கும்
மலர்கள்...
அடுத்தவர்க் குதவா
நாங்கள்...
கற்பனை செய்ய முடியுமா!
பிறகேன் நீங்கள் மட்டும்
இப்படி!
ஆறறிவு கொண்ட உனக்கு
ஐந்தறிவு கொண்ட நான் அறிவுரை சொல்வதா! - இது
இலக்கணத்திற்கு பொருந்தாத
இலக்கியம்.
இனியாவது திருந்துங்கள்.... எங்களை
இந்த உலகில் வாழ விடுங்கள்.
இவ்வளவு கூறியும் அதோ ஒருவன் வருகிறான்...
கையில் எமனோடு...
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100