Showing posts with label விழிப்புணர்வு கவிதைகள். Show all posts
Showing posts with label விழிப்புணர்வு கவிதைகள். Show all posts

Wednesday, April 13, 2011

வகுப்பறை

Copyright : Wikipedia



கரியைத் தோற்கடிக்கும்
கருமை கொண்ட
கரும்பலகை

 பாலை மிஞ்சிவிடும்
வெண்மையைக் கொண்ட 
சுண்ணாம்புக்கட்டி

கருப்பரும் வெள்ளையரும்
இணைந்தால் தான் அழகு பெறும்
உலகம் அழகு பெறும்
என்பதை உணர்த்தும் இவையிரண்டும்

அடுக்குகள் மாறாமல் 
அழகாய் அடுக்கப்பட்டிருக்கும்
மரப்பலகைகள்

அவ்வப்போது தென்றலோடு கலந்துவரும்
ஆசிரியரின் தாலாட்டு

விழிக்க மனம் நினைத்தாலும்
ஒற்றுக் கொள்ளாமல்
போராட்டம் நடத்தும் இமைகள்

ஆசிரியரின் வார்த்தைகளை
அவரை விடவும்
அழகாய் உச்சரிக்கும் என் நண்பர்கள்

நேற்று பார்த்த 
திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்சிகள், பாடல்கள்
மறுஒளிபரப்பு செய்யப்படும்
எங்கள் வகுப்பு அலைவரிசையில்...

உலகப்போர் எங்கள் வகுப்பிலும்
சுண்ணாம்புக் குண்டுகளோடு.

அர்ச்சுனனின் அம்புகளுக்கு இணையான 
அம்புகளாய் - என் நண்பர்கள்
விடுப்புமணி அடித்தவுடன்

எல்லோரும் சென்ற பின்பு
ஏக்கத்துடன் ஏங்கியிருக்கும் ஒரு ஜீவன்
அது வேறு யாருமல்ல - எனது 
வகுப்பறை தான் !  



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

                     

Tuesday, April 12, 2011

மூக்கு

Copyright : Wikipedia


குறிப்பு : இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற   "அரங்கேறும் அங்கங்கள் "     கவியரங்கில் பதிவு செய்யப்பட்டு பாராட்டைப் பெற்றது. 

 அங்கீகரிக்கபடாத அங்கம்
அழகைச் சொல்ல அங்கம்
அறிவுக்குதவா அங்கம்
அவசியமில்ல அங்கம் - இவ்
அவையோரின் எண்ணம் - பலர்
அகத்தின் எண்ணமும் கூட !

கண்கள் கண்டதைக் காணச் சொல்லும்
செவிகள் வதந்திகள் கேட்கச் சொல்லும்
இதழ்கள் பொய்கள் பேசச் சொல்லும்
நாசி நல்லதை மட்டும் செய்யச் சொல்லும்.

அனைத்து அங்கங்களும்
அழிவிற்கு வழிவிடும் - இவன் மட்டும் தான் 
ஆக்சிசனுக்கு வழிவிடுவான்.

அங்கங்கள் பழுதானவர்கள்
அகிலத்தில் உண்டு;
இவன் பழுதானவன்
எவ்வுலகினில் உண்டு.

பாண்டியனின் நாசி
நக்கீரர் புகழ் பாடச் செய்தது
சூர்ப்பநகையின் நாசி
இராமகாவியம் கூறச் செய்தது.

அவமானத்தில் வீழ்பவனும் இவனே !
அகங்காரத்தில் எழுபவனும் இவனே !

" மூக்கிற்கு மேல் கோபம் " - அடைமொழி
காரணம்
அங்கத்தில் உயர்ந்தவன் மூக்கு.
அவனின் உயர்ந்தது உன் கோபமா?

வார்த்தைகள் மறித்துப்போகும் நேரத்தில் கூட
மூச்சுகள் பேசிக் கொள்ளும்.

ஆயிரம் நட்சத்திரங்கள் ஆகாயத்தை அலங்கரித்தாலும்
மதியில்லையென்றால் மயக்கமில்லை.
ஆயிரம் அங்கங்கள் நம்மிடம் இருந்தாலும்
அலகு இல்லை என்றால் அழகு இல்லை.
 
விழிகள் ஓய்வு கொள்ளும் இமைமூடும் நேரத்தில்
இதழ்கள் ஓய்வு கொள்ளும் மௌனம் கொள்ளும் நேரத்தில்
செவிகள் ஓய்வு கொள்ளும் அமைதி உலவும் நேரத்தில்
கை, கால்கள் ஓய்வு கொள்ளும் துயில்பயிலும் நேரத்தில்
இவனும் ஓய்வு கொள்வான் இதயம் உறங்கும் நேரத்தில்.

இவனிடம் பேசாதவர்கள் உண்டா?
மலர்கள் பேசும்; மணங்கள் பேசும்/
ஏன்!
கைக்குட்டை கூட பேசும்
ஜலதோஷம் வரும் பொழுது...

வானத்தின் நட்சத்திரம் 
தமிழச்சியின் மூக்குத்தி
அங்கத்தின் நட்சத்திரம் 
அவளுடைய மூக்கு.

அங்கங்கள் செத்துவிட்டால்
நாம் சாவதில்லை
இவன் செத்து விட்டால்
நாம் வாழ்வதில்லை

நேசிக்க மறந்தவர்கள் கூட சுவாசிக்க மறப்பதில்லை
சுவாசிக்க மறந்தவர்களை நாம் நேசிக்க நினைப்பதில்லை !!

மூச்சை துறந்தவனும் மனிதனல்ல!
மூக்கை மறந்தவனும் மனிதனல்ல !!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





Tuesday, April 5, 2011

மரம் பேசுகிறது !

Photo Courtesy : Sudharshun Gopalan


வாருங்கள் மானிடர்களே 
வாருங்கள் ....
அடுத்தவர் அவஸ்தையில் 
அமிர்தம் உண்ணும் 
அன்பற்ற மானிடர்களே வாருங்கள் !

என்ன யோசிக்கிறீர்கள் !
எதற்கு அழைக்கிறான் இந்த 
மரமடையன் என்றா ?
 பாருங்கள் உங்கள் 
பாதத்தின் அடியில் 
பாதாளத்தில் பரிதவிக்கும் எம் 
புதல்வர்களைப் பாருங்கள் !

அதோ யாரங்கே ! 
சற்று நிறுத்தப்பா ...
நீ ! 
அறிவில் ஆதவன் தான் 
அதற்காக அந்த 
அறிவில்லாதவனை 
"மர மடையன்" என்று திட்டதே ! 
மண்ணோடு காதல் கொண்டு 
மழையோடு நட்பு கொண்டு 
மாலைத் தென்றலோடு உறவாடும் 
நாங்கள் மடையர்களா ? - அல்லது 
மண்ணுக்காக மடிந்து 
மதுக்காக மானமிழந்து 
மாதுக்காக மயங்கும் 
நீங்கள் மடையர்களா ? 
திருத்திக் கொள்ளுங்கள் உங்கள் 
திருவாய் மலர்ந்த வார்த்தைதனை 
அவன் 'மர மடையன்' அல்ல 
"மனித மடையன்."

ஆண்டு நூறுக்குமுன்
அஸ்தமித்து விடும்
அற்ப மானிடா!
ஆண்டுக்கொரு முறை நீ
அவதரித்த நாளைக் கொண்டாடுகிறாய்.
ஆண்டாண்டு காலமாய் இந்த
அவனியை அலங்கரிக்கும் எங்களுக்கு
“பர்த்டே கேக்” எப்போது செய்யப் போகிறாய்?

தனிக்குடித்தனம் செல்லும்
வாழைகள்....
ஆலைத் தாங்க மறந்த
விழுதுகள்...
முகம் வாடிக் கிடக்கும்
மலர்கள்...
அடுத்தவர்க் குதவா
நாங்கள்...

கற்பனை செய்ய முடியுமா!
பிறகேன் நீங்கள் மட்டும்
இப்படி!

ஆறறிவு கொண்ட உனக்கு
ஐந்தறிவு கொண்ட நான் அறிவுரை சொல்வதா! - இது
இலக்கணத்திற்கு பொருந்தாத
இலக்கியம்.
இனியாவது திருந்துங்கள்.... எங்களை
இந்த உலகில் வாழ விடுங்கள்.

இவ்வளவு கூறியும் அதோ ஒருவன் வருகிறான்...
கையில் எமனோடு...
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.




 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...