Tuesday, October 30, 2012

சென்னை ! போடா வெண்ணை என்றது !

Copyright: mckaysavage@flickriver.com

முன் குறிப்பு : சென்னை மேல் அதீத அன்பு வைத்திருப்பவர்கள், இதய நோயாளிகள், இதுவரை சென்னை பக்கம் செல்லாதவர்கள் மற்றும் குறிப்பாக சென்னை வாசிகள் இதனைப்  படிக்காமல் தவிர்க்கமாறு கிறுக்கல்கள்100 சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பின்வரும் விளைவுகளுக்கு நிர்வாகமோ, நிர்வாக ஊழியர்களோ பொறுப்பல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ல மாடிக்கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் மால்கள், சொகுசு திரையரங்குகள் என தனக்கான இமேஜை காலம் காலமாக சென்னை தன்னுள்ளே தக்க வைத்து கொண்டிருப்பதில் எனக்கு துளியும் சந்தேகம் வராதவாறு தான் சென்னை இருந்தது !

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல , திருச்சி வழியாக செல்லாமல் , கும்பகோணம் வழியாக எனது பயணத்தை சொகுசுப் பேருந்தின் (?) ஓட்டுனரும் நடத்துனரும் முடிவு செய்து கொண்டிருந்தார்கள் ! கடைசியில் அத்தடம் வழியே பயணத்தைத்  தொடங்கினார்கள். 'உறக்கம் வராமல் இருந்தால் படி' என என் நண்பன் வாங்கிக் கொடுத்த ஆனந்த விகடன் எனது பையில் உறங்கிக்கொண்டிருந்தது ; எனக்கு உறக்கம் வந்ததால் . சென்னை பயணம் முடியும் வரை அதை நான் படிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்  ( பாஸ் உண்மையிலே சென்னை கொஞ்சம் பிஸி தான் ! )

காலை மணி 4 . இறங்கிய இடம் : தாம்பரம் . தங்குவதற்கென முடிவு செய்யப்பட்ட இடம் : நண்பன் இல்லம் . சேர் ஆட்டோவில் நண்பன் வீடு சென்றோம் ! நானும் என் நண்பர்களும் பின் வரிசையில்! முன்னர் மூன்று பேர் ; அதில் ஒரு இளவயது பெண். ஓட்டுனருக்கு அருகில் ஒருவர் என அடைக்கப்பட்டு அந்த வாகனம் சென்று கொண்டிருந்தது ! காக்பிட்டில் அமர்ந்திருக்கும் பைலட்டை காண்பிக்கும் போது சினிமாவில் ஒரு சாட் வைப்பார்களே, அது போல தான் எனக்கு ரோடு தெரிந்தது ! விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசையை சென்னை நிறைவேற்றியிருந்தது ! வழியில், கடமை தவறா காவல்துறை அவர் கடமையை செய்து கொண்டிருந்தார் ! எல்லாம் சரி வர சென்று கொண்டிருந்தது !

ருத்துவக் கழகத்தில் நான்  மருத்துவன் ஆகிய விசயத்தை காலை பத்து மணிக்கு பதிவு செய்த பின்பு சிறிது நேரம் இருந்ததால் ஸ்கை வாக் பக்கம் சற்று ஒதுங்கினோம் . இடையில் எனது தம்பியின் குறுந்தகவல் வேறு, " ஸ்கை வாக்கா ! ஜாலி பண்ணுனா " என . 'பீட்சா' பார்க்க போய்  ஏமாந்து நானும் என் நண்பனும் 'இங்கிலீஷ் விங்க்ளிஷில்' தஞ்சம் புகுந்தோம் . ஏற்கனவே அப்படத்தை நான் தமிழில் பார்த்திருந்ததால் ஹிந்தி என்னை அச்சப்பட வைக்க வில்லை . ஆனால் இன்றளவும் ஒரு இந்தியனாக இருந்து கொண்டு ஹிந்தி கற்கவில்லை என நான் வருத்தப்படவில்லை . காரணம் யாதெனில் சில மாதங்களுக்கு முன்பு தான் 'ஹாக்கி' நமது தேசிய விளையாட்டு இல்லை என சொன்னார்கள் ! இன்னும் சில மாதங்கள் கழித்து 'ஹிந்தி நம் தேசிய மொழி இல்லை என சொல்ல நேரிடும் ( அப்புறம் படிசுட்டோமேன்னு பின்னாடி வருத்தப்படக்கூடாதுல்ல  அதான் ).

 சரி , அது எல்லாம் இருக்கட்டும் நம்ம மேட்டருக்கு வருவோம் ! அங்கே தனியாக ஒரு பெண்ணை கூட பார்க்கவில்லை ! எல்லோர் பக்கத்திலும் அவர்களது பாடிகார்டுகள் ! கொடுத்து வச்ச மவராசனுங்க :) என்று முதலில் நினைத்துக்கொண்டேன் ! பின்னர் தான் , புரிந்தது அவர்கள் எல்லாம் அன்றைக்கு அறுக்கப்பட்ட ஆடுகள் என அவர்கள் டிக்கெட் வாங்க நின்ற பொழுது ! தூரத்தில் பார்க்க மட்டுமே சென்னை பெண்கள் அழகு ! ஓர் இருவரைத்  தவிர . ஒல்லியான ஒரு கல்லூரி பைங்கிளி ( சந்தோசப்பட்டுட்டு போகட்டும் போங்க ! ) தான் இன்னும் ஒல்லியாக தெரிவதற்காக டைட்டாக லெக்கிங்ஸ் அணிந்திருந்தாள் . இன்னும் சில பெண்கள் அங்கம் தெரியுமாரான ஆடைகள் , அளவுக்கதிகமான மேக் அப்புகள் என வலம்  வந்து கொண்டிருதார்கள். அதற்குள் என் நண்பன் 'மோமிடோஸ்' என ஒன்றை வாங்கி வந்தான். அதற்கும் எங்கள் வீட்டு காரகொழுக்கட்டைக்கும் எந்த வித்தியாசமும் என்னால் கண்டுபிடிக்க  முடியவில்லை . உண்மை சற்று கசக்கும் தான் ! இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே ! எங்கள் ஊர் ஸ்ரீரங்கத்துப்  பாவாடை தாவணிகளுக்கு இணையாக ஒரு ஜீன்ஸ் டாப்ஸை கூட என்னால் சென்னையில் பார்க்க முடியவில்லை !


டுத்த நாள் MGM ! பைக்கில் பயணம் . முகப்பூச்சு பவுடர் அடிக்காமல் வந்த எனக்கு, சென்னை போக்குவரத்துக் கழகம் இலவசமாக அந்த வேலையை செய்து கொண்டிருந்தது ! முகம் கழுவும் பொழுது தான் தெரிந்தது பல பேர் ஏன் ஆப்கான் தீவிரவாதிகள் போல முகம் மறைத்து செல்கிறார்கள் என!  வழி எங்கும் கட்டிடங்கள் ; அங்கே மனித உருவில் மக்கள்கள் நடந்து கொண்டிருந்தார்கள் ; அவர்கள் சிரிப்பை மறந்திருந்தார்கள்; வேலைக்கென செய்யப்பட்ட ரோபோக்கள் போல தான் அவர்கள் என் கண்களுக்கு தென்பட்டார்கள். அந்த தீம் பார்க்கில்  சில பல விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன பராமரிப்பு காரணமாக ! இருந்தாலும், கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  என் நண்பன் நல்ல காத்து வருதா ( பிகருகலைத் தான் அவன் அப்படி சொல்வான் ) என நீண்ட நேரம் காத்திருந்து, தீம் பார்க் முழுதும் அலைந்து திரிந்து அலுத்திருந்தான். பின்னர் தான் தெரிந்தது நல்ல காற்று வீக் எண்ட்ல அடிக்காதாம் ! 500 ரூபாய் என்னுடைய நஷ்டக் கணக்கில் ஏற்றப்பட்டது !

மாலை பள்ளி நண்பனின் சந்திப்பு ! நண்பர்களை, மனிதர்களை நாம் எந்த வயதில் சந்திக்கிறோமோ அவர்கள் வயதானாலும், அந்த வயதில் இருப்பவர்களாகவே நம் மனது ஏற்றுக்கொள்கிறது. என் நண்பனை நான் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவனாகத்  தான் பார்த்துக்கொண்டிருந்தேன்; அவன் சென்னை ஐ.டி  புழுதியில் மறைந்து விட்ட ஒரு துகள் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மறுபடியும் அன்றிரவு 'பீட்சா' விற்கு முயற்சி செய்து தோல்வியை சந்தித்தோம். அட போங்க பாஸ் ! உங்க ஊர்ல படம் பாக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம் ! கடைசியாக எல்லாம் முடிந்த பின்பு, மனிதம் நிறைந்த மனிதர்கள் குறைவு என்பதை உணர்ந்த பின்பு , அடுத்தவர்களை மிக எளிதாக காயப்படுத்தும் உறவுகள் உண்டு என்பதை அறிந்த பின்பு, என் சுவாசம் நோக்கி பயணமானேன் ! பேருந்தில் ஏறி அமர்ந்த பின்பு  விவேக்கின் வசனம் 'சென்னை ! போடா வெண்ணை என்றது ! ' என்பது தான் என்  ஞாபகம் வந்தது .

து சென்னை மக்களுக்கு மட்டும் :
( ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்கவும் )

1.சென்னை பிடித்திருக்கிறதா ?
2.பணம் மட்டும் தான் வாழ்கையா ?
3.நல்ல காற்றை எப்பொழுது கடைசியாக சுவாசித்தீர்கள் ?
4.நீங்கள் சிரிப்பீர்களா?
5.தீம் பார்க், மால், பப்புகள் தவிர உங்கள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் இடங்கள் சென்னையில் இருக்கின்றனவா ?


பின் குறிப்பு : இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையல்ல ! என் மனம் புண்பட்டதால் எழுதப்பட்டவை !
கொசுறு தகவல்:  26/10/2012 முதல் நான் பதிவு பெற்ற அரசு மருத்துவர் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள் 100




Monday, October 29, 2012

தவிப்பும் தடயம் தவிர்த்தலும்

Photo Courtesy : http://www.coloribus.com

ண்மையில் தான் ஹேமா செல்வராஜின் இக்கவிதையைப் படித்தேன் ! ஒன்று சொல்வது போல் அமைத்து வேறொன்றில் முடிப்பது அழகு ! இது போன்று நானும் முன்பு "விடைபெறுகிறேன் !" என்ற கவிதையை எழுதினேன் . நேரமிருப்பின் வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் .


ம்மை அறிமுகமே இல்லாத
இடமாய் தேட வேண்டும்

சுற்றி முகப் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது

பனிப் பெண்கள் இல்லாத
கூட்டம் மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்

ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு

ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்

வக்கிரப் பார்வையோ
சில்மிஷச் சிரிப்போ
இல்லாத விற்பனையாளனா
என்று உறுதிப்படுத்த வேண்டும்

முதலில் ஒரு
வீட்டு உபயோகப் பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்

இத்தனையும் வேண்டும்
கூச்சமின்றி கடையில்
ஆணுறை வாங்க. 


- ஹேமா செல்வராஜ் @ ஆனந்த விகடன்

கருத்து: ம் பாதுகாப்பிற்கு ஆணுறையோ, நம் நலத்திற்கான ஸ்டேப்ரீயூ வாங்க கூனி குறுகி கூச்சப்பட்டுக்   கடைகளில் வாங்கும் நாம் , லஞ்சம் வாங்கவோ , அடுத்தவர் மனங்களைக் காயப்படுத்தவோ  தயங்குவது இல்லை என்பதே நிதர்சனம்.



Wednesday, June 27, 2012

உன் பேர் என் பேர் சேர்த்துவைத்தால் !

Photo Courtesy : sortol.com




 உன் பேர்
என் பேர் சேர்த்துவைத்தால்
காதல் வந்து பிறக்குமா ?
காதல் வந்தால்
நொடிகள் கூட
காத்திருக்கும் தெரியுமா ?

நீஉண்ட தேநீர் உண்டு
இனிப்புச் சேர்க்கச் சென்றேனடி;
இதழோடு இதழ் சேர்த்து
தேநீர் கசக்க செய்தாயடி !

சிறு சிறு முத்தம் கேட்டு
சிறுகச் சேர்த்தேன் என்னை
முழுதாய் கட்டி அனைத்து
மொத்தம் தொலைத்தாய் பெண்ணே !

விரலோடு மழைகோர்த்து
வழிகள் நூறு சென்றேனடி
வழியெங்கும் நீயே நின்றால்
பாதை எங்கே காண்பேனடி!

குறு குறு  குழைந்தையெனக்
கண்சிமிட்டி பார்த்தேன் உன்னை
விளையாட்டாய்ப் பிடுங்கிச் சென்றாய்
விழியோடு இதயம் தன்னை!

மைக்கும் நொடி மறைவாயெனில்
இமைகள் வெட்டி எறிந்திடுவேன் - உன்
இதழ்கள் தரும் சூட்டில் தானே
தினந்தோறும் உயிர்த்தெழுவேன்.


  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, April 10, 2012

கவிதையாய் சில கிறுக்கல்கள்

மரண நாள்


Photo Courtesy : ifreewallpaper.com

ன் பார்வையால்
என்றோ எரிந்து விட்ட நான்
மறுபடியும் எரிக்கப்படுகிறேன் ! - இன்று எனக்கு
மரண நாள்.


முதல் எழுத்து

Photo Courtesy : http://prozailirika.ru

 யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.

தற்கொலை 


Photo Courtesy : midiaextra.com

ன்பே!
தற்கொலைக்கு நான் எதிரி தான்
இருந்தாலும் என்ன செய்ய …
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் – என் வார்த்தைகள்
அதைத் தானே செய்கின்றன.


கல்லறை

Photo Courtesy : bp6316 @ Flickr


ல்லுக்குள் ஈரம் – என்
காதலியின் கண்ணீர் – எனது
கல்லறையில்..

 மழைக்காதல்

Photo Courtesy : http://www.wallpapermania.eu

ன்றைய இல்லங்கள் அனுமதிக்கின்றன
காதலையும் மழையையும்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மட்டும்.



 -சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, March 17, 2012

அடுப்பங்கறை

Photo Courtesy : Gangadhara108@Flikr

சுடச் சுட இட்லி பரிமாறி - வர வர
சரியாவே சாப்பிடுறதே இல்ல - என
செல்லமாய் அதட்டி ...
சட்னி, சாம்பார் , மீன் குழம்புக்கு மத்தியில்
சடாரென்று தள்ளிவிட்டு ..
சத்தமில்லாமல் அடுப்பங்கறையில் நீ
சாப்பிடுவாயே ! - 'பழையது' *
அதில் உள்ளதம்மா
பலகோடி வருடங்களுக்கான பாசமும் ;
'நீ இன்னும் சாப்பிடலையா?' எனக் கேட்க மறந்த என்னுடைய பாவமும்.

*பழையது - முதல் நாள் செய்து மிஞ்சிய சாதம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...