முன்குறிப்பு: இது ஒரு குறிப்பிட்டு தலைவனைப் பின்பற்றும் ரசிகர்களை மட்டும் குறிப்பிடும் பதிவல்ல; அறிவின்றி நடந்து கொள்ளும் அத்தனை ரசிகர்களுக்குமான பதிவு.
மேலுள்ள தலைப்பைச் சற்று உரக்கத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ரசிகர்கள் என்ற பெயரில் நாம் செய்யும் கண்மூடித்தனங்களைப் பார்க்கும் பொழுது. உங்களுக்குத் தெரியுமா ? இரத்தமின்றி எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படாமல் போகின்றன என ; உங்களுக்குத் தெரியுமா ? டெங்கு போன்ற காய்ச்சலுக்கு இறுதிநிலை சிகிச்சை இரத்தம் தான் என ; உங்களுக்குத் தெரியுமா ? தன் இரத்தத்தைப் பிரித்துதான் உங்கள் தாய், உங்களுக்கு தாய்ப்பால் தந்தாள் என . எனக்குத் தெரியும் ரசிகர்களே ! உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என !
தன் தலைவனின் திரைப்படம் வெளியாகிறது என்றால் போதும், நூறோ ஐந்நூறோ டிக்கெட் பற்றி கவலையில்லை, அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி, வெற்றிப்புன்னகைப் பூத்து, காட்சிக்கு காட்சி கைத்தட்டி, 'எங்க தளபதி டா' என ஆன் தி ஸ்பாட் வசனங்கள் பேசி, போஸ்டர் ஒட்டி, கட்-அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்து, உணர்சிகளை விற்று உல்லாசம் காணும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . இரத்தத்தின் அருமையும் உயிரின் மதிப்பும் . கோபம் கண் மறைத்து, வார்த்தைகள் ஏ சான்றிதழ் வாங்க காத்திருக்கும் பொழுதும், ரசிகர்களாகிய உங்களை கண்ணியமாகத் திட்டத்தான் விழைகிறேன்.
ஏன் இந்தக் கோபம் என தாங்கள் வினவினால், அதற்கான பதில் கீழுள்ள புகைப்படம் தான்.
மதியுள்ள மானிடன் செய்யும் செயலா இது ? பால் விலையை விட இரத்தம் மலிவாகிப்போனது என்ற எண்ணத்திலோ தாங்கள் இத்தகையத் தாரகக் கொள்கையைப் பூண்டுள்ளீர்கள் ! நானும் ரசிகன் தான் சில நடிகர்களின் நடிப்புக்கு மட்டும். சரி ரசிகா !உன்னிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விழைகிறேன் ; நீ அதற்கு சினம் கொண்டாலும் சரி.
- உன் தலைவன் என தலையில் வைத்துக் கொண்டாடுகிறாயே, உன் வீட்டுச்சோற்றுப்பருக்கைக்கு உப்பாவது அளித்திருப்பானா உன் தலைவன்?
- உன் தலைவனுடைய அரசியல் ஆசைக்கு, பலியாகப் போவது உன் இளமையும் கனவுகளும் தான் என்பது உனக்குத் தெரியுமா ?
- 'சினிமா' என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் தான்; வாழ்க்கையில்லை என்பது உனக்குத் தெரியுமா ?
- கண்மூடித்தனமாக நவீன சாமியார்களைப் பின்பற்றும் பக்தர்களுக்கும் , தலைவனைத் தொழும் உனக்கும் வித்தியாசம் இல்லை என்பது தெரியுமா ?
- இறுதியாக, நீ செய்யும் அறிவிலி செயல்களை உன் தலைவன் ரசிக்க மாட்டான் என்பதாவது உனக்குத் தெரியுமா ?
இதற்கான பதிலை நீ தேடி அடைந்தால், இதுபோன்ற செயல்களில் நீ ஈடுபட மாட்டாய். போட்டி நடிகர்கள் இருவருமே கைக்குலுக்கி, கைக்கடிகாரம் பரிசளித்து அன்பு பாராட்டினால் கூட , 'நான் அவர் ரசிகன்; நான் இவர் ரசிகன்' என நீ அடித்துக் கொண்டு தானே இருக்கிறாய் . உன் தலைவன் பணங்களில் படுத்துப்புரள்வதைக் கண்டு மகிழும் உனக்கு, உன் வீட்டில் படுக்கக் கூட பாய் இல்லை என்பதை யாரடா சொல்லி புரியவைப்பது ? என்னைப் பொறுத்தவரை உன் தலைவனுக்கு செய்யும் அதிகப்பட்ச மரியாதை எதுவாக இருக்க வேண்டும் தெரியுமா ? உனது கைத்தட்டல் தான் . தலைவன் மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் உன்மேல் சமூகப்பிரச்சனைகளும், வீட்டுக்கஷ்டங்களும் அவ்வப்போது தண்ணீர் தெளித்துக்கொண்டு தான் இருக்கிறது. நீதான் விழிக்க மறுக்கிறாய். ஆம் ! நான் விஜய் ரசிகனில்லை ; உன்போல் கண்மூடித்தனமாகப் பின்பற்ற !
விழித்தெழு ரசிகா
வீரியம் கொண்ட விதையாய்
விவேகம் உள்ள மனிதனாய் !
இப்பதிவைக்கண்டு, என்னைத்திட்ட வேண்டும்; என் மேல் வழக்கு பதிய வேண்டும் என் விழைந்தால் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் . ஆனால், அதற்கு முன்பு அருகிலுள்ள இரத்த வங்கியில் இரத்ததானம் செய்து விட்டு வா ! ( ரசிகர் மன்றங்கள் மூலம் இரத்த தானம் செய்தது என்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது ; ஏனெனில் அந்தப் புண்ணியத்திற்கு உரியவன் நீயில்லை ; உன் தலைவன். )
பின்குறிப்பு : 'நான் விஜய் ரசிகனில்லை' என்பதை, 'நான் அந்த மூட செயலைச் செய்த விஜய் ரசிகன் போல் இல்லை' எனவே கொள்ளவும்.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100