நம் காதல் என்றுமே
கானல் நீர் !
நான் மகிழ்வதோ நீரென்று
நீ நினைப்பதோ நிஜமன்றென்று.
உண்மையில் நான் தான் வெகுளி
உலக இயல்பு தெரியாத கோமாளி
அன்பை நாடும் அறிவிலி – மொத்தத்தில்
நீ ஒரு அறிவாளி.
உன்னுடன் உலகம் சுற்ற வேண்டும் – என்று
ஓராயிரம் முறை நினைத்திருக்கிறேன்;
உண்மையில் உன் உலகில்
ஓர் மூலையில்கூட நானில்லை – என்று
அண்மையில் தான் உணர்ந்திருக்கிறேன்.
உன்னுடைய நட்பு வட்டம்
உன்னுடைய நலம்விரும்பிகள்
உன்னுடைய ஆதரவாளர்கள்
உன்னுடைய அன்புக்குரியவர்கள்
அனைவருக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ அறிவாய்
இவனுக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ மறைப்பாய்.
உன்னை சந்திக்கும் பல சமயங்களில்
மௌனம் மட்டும் என் மொழியாக …
புன்னகை மட்டும் உன் பதிலாக.
” காதல் பிச்சை ” கேட்கிறேன் – அது ஏனோ
தெரியவில்லை – என்னிடம் வரும் பொழுது மட்டும்
உனது பைகளில் பணமிருப்பதில்லை.
செய்வதைக் காட்டிலும் சொல்வது மேலானது
அன்பில்லா இடத்தில்…
சொல்வதைக் காட்டிலும் செய்வது மேலானது
அன்புள்ள இடத்தில்;
நீயே முடிவு செய்து கொள்
சொல்வதா! செய்வதா! என்று.
நான் தவறானவன் தான் – உன்
தகுதிக்கு குறைவானவன் தான்.
அறிவுக்குத் தெரிகிறது – பாவம் என்
அகம் மட்டும் அழுகிறது.
படிப்பிலும், பண்பிலும்,
பக்குவத்திலும், பழகுவதிலும் – நீ
புதியவள் – எனக்கு மட்டும்
புதிரானவள்.
என் காதலும், கவிதையும் என்றுமே
உனக்கு நடிப்பு… – என்னை
நடிகனாய் அங்கீகரித்த முதல்
பல்கலைக்கழகமே
நன்றி !
என்னுடையது
ஒரு தலைக் காதலா?
” இல்லை “
என்று நீ சொல்லும் வரைக் காத்திருப்பேன்
ஒரு தலைக் காதலுடன் .
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100