Copyright - http://www.nytimes.com |
முன் குறிப்பு : அண்மையில் 'துப்பாக்கியில்' ஏற்பட்ட பிரச்சனைகளும், அதன் பிறகு அப்படத்தின் இயக்குனர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகக் கூறியதுமே இக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை உந்தியது!
" ஏன் இந்தக் கேள்வி ? உண்மை தானே ! "
என்று உங்கள் இதயத்தில் எங்கேனும் ஒரு மூலையில் நீங்கள் யோசித்தீர்கள் என்றால் உங்களைக் காட்டிலும் ஒரு அறிவிலி இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஏனென்றால், இஸ்லாம் மதத்தின் வலிமையையும், அதனைப் பின்பற்றும் நண்பர்களின் மனத்தூய்மையையும் அனுபவத்தால் பெறாதவன் பிதற்றுகிற வார்த்தைகள் தான் இவை.
சில சமயம் நான் யோசிப்பதுண்டு ... ஒரு குறுகிய சமூகம் என்பதற்காகவே அவர்கள் மீது நாம் குற்றம் சாற்றுகிறோமா என்று ? இல்லை ... இல்லை ..... அப்படியொன்றுமில்லை ; பின்லேடன் , கசாப் போன்றோரை வசைபாடும் நாம் தான் அப்துல் கலாம் , ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரையும் பாராட்டுகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். உண்மை தான் . ஆனால், அதே நாம் தான் ... இஸ்லாமிய பெயர் கொண்டவர் என்பதற்காக, இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் என்று கூட பாராமல் ஆடைகள் கலைத்து , அமெரிக்க அரசு அவமானப்படுத்திய போது அமைதியாக இருந்தோம் . அப்பொழுது நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம். இப்பொழுது புரிகிறதா ! நான் ஏன் அப்படி சொன்னேன் என்று !
சில மதங்களுக்கு முன்பு சிம்பு நடித்த வானம் படம் பார்த்தேன் . அதில் வரும் பிரகாஷ்ராஜின் கதாப்பாத்திரம் இன்று பெரும்பாலான இந்திய முஸ்லீம்களின் முகமாக பிரதிபலிக்கிறது.கசப்பானவை என்றாலும் அதுவே உண்மை .ஏதோ ! எங்கோ ! மதமறியா மூடன் செய்யும் அற்ப செயல்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் கூண்டில் ஏற்றுவது அழகா?உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ... எனக்கு வாய்த்த நண்பர்களுள் உண்மையானவர்கள் என் இஸ்லாமிய நண்பர்களே ! இதில் " உண்மையானவர்கள் " என்று சொல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கோடிட்டுக் கொள்ளலாம்.
என் இஸ்லாமிய நண்பன் ஒருவன் தன் மதம் மீது மிகுந்த பற்றுடையவன். நான் அவனுடன் அடிக்கடி இது பற்றி வாதிடுவது உண்டு.
" முஸ்லீம்ஸ் எல்லாமே Terrorists தான் டா ! பாரு இன்னைக்குக் கூட Newspaper ல போட்டிருக்கான் ; நேத்து நடந்த குண்டு வெடிப்புக்கு ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தான் பொறுப்பேத்திருக்கான் ! " .
இது அவன் மனத்தைக் காயப்படுத்தியிருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும் . என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் அவன் ஒன்றே ஒன்று மட்டும் சொல்வான் . " அவனுங்க எல்லாம் முஸ்லீம்சே இல்லடா ! உண்மையான இஸ்லாமியன் அன்பை மட்டும் தான் டா விரும்புவான் "
அப்பொழுது அவன் அளித்த பதில் மழுப்புவதாகவே தோன்றினாலும் ... இப்பொழுது நான் உணர்கிறேன் எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை என்று. உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் ;
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்ததீர்கள். "
அக்கிரகாரத்துக் கவிஞன் வாலி கூட ஒரு முறை தன்னை " கூன் பிறைகளால் செய்த கோதண்டம் " என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் உங்களுக்கு ஐயம் நீங்காவிடில் ஷாருக்கான் நடித்த " MY NAME IS KHAN " திரைப்படம் பாருங்கள் . உங்கள் பெரும்பாலான வினாக்களுக்கு விடை கிடைத்து விடும்.
சரி அதையெல்லாம் விடுங்கள் ; உங்களிடம் ஒரேயொரு கேள்வி .
ரம்ஜான், பக்ரீத் திருநாட்களில் உங்கள் இஸ்லாமிய நண்பன் உங்களுக்கு அளிக்கும் பிரியாணிச் சோற்றில் விஷம் இருக்கிறதா ? என்று ஆராய்ந்த பின்பா உண்பீர்கள்!
"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம்
அறிவுக்கு மட்டும்தான் "
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100