Showing posts with label Doctors Pain.. Show all posts
Showing posts with label Doctors Pain.. Show all posts

Saturday, January 7, 2012

ஏன் இந்தக் கொலைவெறி ?

Photo Courtesy : healthcareconsiderations.blogspot.com

குறிப்பு : சென்ற வருடம் என்னுடைய பழைய வலைப்பூவில் எழுதிய பதிவு, அதனை மறு பதிப்பு செய்கிறேன்.

அனைவருக்கும் முதற்கண் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 

சொந்த அலுவல் காரணமாக தொடந்து எழுத இயலாமைக்கு எனது வருத்தங்கள். வருடத்தின் முதல் பதிவு இவ்வாறு அமைய வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், காலத்தின் கட்டாயம் அதுவெனில் யாது செய்ய இயலும் .

ற்று நிதானமாகவும் நியாமாகவும் பார்க்க வேண்டிய விஷயம் தான் அண்மையில் அரங்கேறியிருப்பது. இரத்தக்கறைகள் படியாத செய்தித்தாள்கள் வருங்காலத்தில் வெளியாகாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு அச்சிடப்படாத ஆதாரம். மருத்துவர் ஒருவர், மதிகெட்ட மூடன் ஒருவனால் மரணத்திற்கு தள்ளப்பட்ட சம்பவத்தின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பீர்கள் ! அலசியிருப்பீர்கள் !

நான் பேசவிருப்பது ...
அதைப் பற்றியல்ல ; அதைச் சார்ந்திருப்பது பற்றி . ஆம், இத்தகைய சூழல் உருவாவதற்கு காரணம் சில அடிப்படைத் தவறுகளே ! தவறுகள் மக்களிடம் மட்டுமல்ல, அங்கங்கே  மருத்துவ சமூகத்திலும் புதைந்திருப்பது உண்மை தான் ! ( என்னுடைய மருத்துவ நண்பர்கள், என்னுடைய இக்கருத்துக்குக் குறைபட்டுக்கொண்டாலும், இதில் பொதிந்திருப்பது உண்மை என்பது அவர்கள் அறிந்ததே ! )

ருத்துவர்களின் தவறுகளில் சில ...

  • பல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் அறிவுமிக்க மருத்துவர்களை உருவாக்குகிறதே தவிர மனிதம் நிறைந்த மருத்துவனை உருவாக்க மறந்து விடுகிறது. வலிக்கான மருந்தை மட்டுமே பரிந்துரை செய்யும் எங்கள் படிப்பு, வலியின் வேதனையை ஒரு போதும் உணரச்செய்ததில்லை. ( இந்த 5 ஆண்டு கால படிப்பில், இதுவரை எந்தவொரு புத்தகமுமோ, பேராசிரியரோ நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை.)
  • தெரிந்தவரின் நோயாளி என்றால் முன்னுரிமை கொடுப்பதும், மிகவும் கவனத்துடன் கையாள்வதும், அதுவே அறியாத ஒருவர் என்றால் அலட்சியம் காட்டுவதும் நடைமுறையில் நடைபயின்று கொண்டு தான் இருக்கிறது. ( பிரிவினைக் கலாச்சாரம் ( Partiality ) மற்ற துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக , உயிரைக் காக்கும் இத்துறைக்கு அது அவசியம் தானா? )
  • பணத்தின் பின் மருத்துவம் பயணிக்க ஆரம்பித்து பலவருடம் ஆகிவிட்டது! இந்த மாற்றத்திற்கு காரணம் மருத்துவர்கள் மட்டுமல்ல, மக்களும் தான் ! தனியார் மயமாக்கல், வணிகமயமாக்கல், அரசியல் உள்ளீடுகள் அனைத்தும் இவற்றின் அடிப்படை நாதங்கள்!
  • தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்ளும் மெத்தனப்போக்கு ! மருத்துவன் என்ற நிலையில் இருந்து வழுவி, தன்னை ஒரு கடவுளாக பாவித்துக்கொள்ளும் பரிதாபச் செயல் ( விதிவிலக்குகள் வெகுசிலர் மட்டுமே ! )
  • ஒற்றுமையின்மை ! என் வீட்டு கூரை எரிகிற வரைக்கும் எனக்கு என்ன கவலை என்னும் சுயநல எண்ணம் ! ( மருத்துவர்கள் அவசியம் களைய வேண்டிய ஒரு குணம் ! இது அறிவுரையல்ல - காலத்தின் கட்டாயம் )

க்களின் அறியாமைகளில் சில ....

  • பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் மெத்தப்படித்தவர் ; அதிகம் அறிந்தவர் ; நம்மை விரைவில் நோயிலிருந்து விடுவிப்பார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கை .  ( அறிவு சார்ந்த அளவுகோலை பணத்தின் கைகளில் கொடுத்தது யார் ? இந்தச் சமூகம் தான். இலவசமாக வைத்தியம் பார்க்க நாங்கள் தயார் ! அப்பொழுது கூட நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் - ஓசியில வைத்தியம் பார்குறாரே ! நல்லா பார்ப்பாரா ? )
  • ஒத்துழைப்புத் தாருங்கள் ! மருத்துவர்களும் மனிதர்களே ! அவர்களுக்கும் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளும் வைக்கப்பெற்றிருக்கும் . ( புரியவில்லை என்றால் ஒருமுறை உங்கள் அருகில் உள்ள அரசு மருத்தவமனைக்கு சென்று வாருங்கள். நோயாளிகளை மருத்துவர்கள் நிந்திப்பதை மட்டும் கவனிக்காமல் அதன் அர்த்தத்தையும் அலசிப்பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு கட்டாயம் புரியும். )
  • அரசு மருத்தவமனைகளில் ஒழுங்கான மருத்தவம் செய்யப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கும் அறிவாளிகளே ! என்றேனும் ஒரு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் சரிவர வழங்கப்படுகின்றனவா ? நோயாளி, மருத்துவர், செவிலியர் விகிதாசாரம் சரியான அளவில் இருக்கிறதா என  யோசித்துள்ளீர்களா ? 
  • ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் ! ஒரு உயிர்க்கொல்லி (HIV) நோயாளியின் அருகில் அமர்ந்து நீங்கள் பயணம் செய்வீர்களா? ஆனால், அதே நோயாளிகளின் இரத்தத்தை நாங்கள் கையாள்வதும், அவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிப்பதும் நடைப்பெற்றுக் கொண்டுதானே இருக்கிறது ! அச்சமயம் ஏதோ ஒரு உதிரத்துளி எங்கள் கண்களிலோ, காயம்பட்ட எங்கள் கைகளிலோ தவறி விழுந்தால், தவறு செய்யாமலேயே நாங்கள் தண்டிக்கப்படுவோமே ! அதனை என்றேனும் யோசித்துள்ளீர்களா ? உங்கள் நோயைப் போக்குவதற்காக நாங்கள் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
  • கடவுளாக எங்களைத் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது எங்கள் கடமை. கடமை செய்பவர்களை முடிந்தால் பாராட்ட வேண்டுமே தவிர தொழக் கூடாது.

றுதியாக, அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Related Posts Plugin for WordPress, Blogger...