Showing posts with label என் கனவுகளின் தொகுப்பு. Show all posts
Showing posts with label என் கனவுகளின் தொகுப்பு. Show all posts

Wednesday, November 14, 2012

என் கனவுகளின் தொகுப்பு !


கிறுக்கல்கள்100 நண்பர்களுக்கு முதற்கண் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீண்ட போராட்டங்களுக்குப்  பிறகு, அண்மையில் தான் ஒரு குறும்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை முன்னமே முகப்புத்தகத்தில் நான் பகிர்ந்திருந்தாலும், நேற்று தீபாவளி நன்னாளில் உங்களுக்குச் சொல்லலாம் என விழைந்தேன். பிறகு தான், என் ஞான ஒளியில் ஒரு கீற்று என்னை உசுப்பேற்றி கீழ்வரும் வார்த்தைகளைக் கூறியது ! "அடேய் அற்ப சத்தியசீலா ! ஒருவேளை உனது நண்பர்கள் இனிப்புகளிலோ, வெடிச்சத்தங்களிலோ, வேடிக்கை வெளிச்சத்திலோ, துப்பாக்கியிலோ ( நேற்று படம் பார்த்த எனது நண்பர்கள் நன்றாக உள்ளது என சொல்லிய காரணத்தால், கூடிய விரைவில் நானும் துப்பாக்கியால் சுடப்படக் கூடும்), இல்லை துறு துறுவென ஆங்கிலம் பேசும் தமிழ் நடிகையின் பேட்டியிலோ மெய்மறந்திருக்கக்கூடும்; அப்பொழுது உன்னுடைய கிறுக்கல்கள்100, கிழிக்கப்படும் அல்லவா ! " யோசித்தேன்; ஆதலால் தான் இன்று இவ்வெளியீடு !

நிவேதிதா அவர்களின் தயாரிப்பில், கௌதமின் இயக்கத்தில், மற்றும் பலர் கடின உழைப்பாலும், கற்பனைத்திறத்தாலும் உருவாகிக்கொண்டிருக்கும் உன்னத படைப்பு தான் " என் கனவுகளின் தொகுப்பு ". அடியேன் ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியதும் இதற்கே ! ( கீழே, இடமிருந்து வலம் , ஐந்தாவது  இடத்தில் அடியேன் பெயர் இருப்பதை நோட் செய்யவும்.) என்னதான் நாம் பணியாற்றும் படம் என்றாலும், விமர்சனம் என்று வரும்பொழுது சற்று கராராகத் தானே இருக்க வேண்டும் ! இனி வருவது "போஸ்டர் விமர்சனம்".
இதுவரை இரண்டு போஸ்டர்களை அக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றினை மட்டும் நாம் பார்ப்போம்.

ரு இளைஞன் தனது அறையில், LED வெளிச்சத்தில், இடது கையால் தாளில் எழுதிக்கொண்டிருப்பது போல அக்காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகே, தலையணை போன்று இரண்டு புத்தகங்கள். சரி இப்பொழுது நம் கற்பனையையும் பிறகு விமர்சனத்தையும் தொடரலாம்.

த்தகைய சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது, ஒரு கல்லூரி மாணவன் தன்  காதலிக்கு கடிதம் எழுதுவது போலவே தோன்றுகிறது. இருப்பினும் ஹீரோவின் முகம் சற்று சீரியசாக இருப்பதால், வேறு எதாவது முக்கியமான காரணமாகவும் இருக்கலாம். ஏன் ! ஒரு சமூகப்போராளி மின்வே(வெ)ட்டைக்
குறித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகக் கூட இருக்கலாம்; இல்லை, ஏதோவொரு தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவனாகக் கூட இருக்கலாம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று சூழலுக்குமே இந்தத் தலைப்புப் பொருந்திப்போவது தான். விமர்சனத்திற்கு செல்வோமா ?

ழுத்துக்கோர்வையும், அதனை அதற்கேற்ற இடத்தில் பொருத்தியிருப்பதும் அழகு. "WAKE UP MEDIA PRESENTS" எதார்த்தமான சேர்க்கை என்றாலும், தலைப்போடு பொருந்திப்போவது அழகு. இருப்பினும், WAKE UP MEDIAவிற்கு LOGO இல்லாதது திருஷ்டி. மின்னொளியிலும், சூழலுக்கேற்ற உடைத்தேர்விலும், முகபாவனைகளிலும் கதையின் பாத்திரப்படைப்பிற்குப் பொருந்திப்போகும் கதை நாயகன் 'அஜய் ரூபன்' நல்லதொரு தேர்வு. குறுப்படத்துறையிலும், திரைத்துறையிலும் அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக உள்மனம் கூறுகிறது. மேலும் தமிழ்க்குறும்படம், போஸ்டர் முழுவதுமே ஆங்கிலம் பூசியிருப்பது ஒரு நெருடல். டைரக்டர் கவனிக்க !


து எப்படியோ ! இது வெறும் கற்பனைக்கனவுகளின் தொகுப்பா ?  இல்லை சாதனைக்கனவுகளின் தொகுப்பா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

கொசுறு தகவல் : "என்னடா இவன் ! பத்து பதினஞ்சு பாட்டு எழுதுனவன் எல்லாம் சும்மா இருக்கான் ; ஒரு பாட்டு எழுதிட்டு இவன் கொடுக்குற அலும்பு இருக்கே ! " என இதழின் ஓரத்தில் என்னை வைது கொண்டிருப்பவர்களுக்கு, என்னுடைய அம்மாசிக்கு ( அம்மம்மா) இப்பாடலை ஒலித்துக் காண்பித்தேன். ' நான் படாத தாலாட்டா?' என சொல்லிக்கொண்டே கேட்க ஆரம்பித்தவர்கள், " நல்ல தாண்டா இருக்கு; உன் பொண்டாட்டிக்கு வேலை மிச்சம்" என சொல்லிச் சென்றாகள் ! அன்பார்ந்த அருமை நண்பர்களே ! இது ஒன்னு போதாதா ஐயா அலும்பு கொடுக்க ?


உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழுள்ள பிளாக்கர் கருத்துப்பெட்டி அல்லது முகப்புதுகக் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...