copyright : Srikanthbfa |
தேனே!
கனியே!
அமுதே!
ஆசையில்லா மனிதனுண்டா ?
ஓசையில்லா மொழிகளுண்டா?
ஆசைகள் வளர்ச்சி தரும்;
பேராசை அழிவைத் தரும்.
ஓசைகள் இன்பம் தரும்;
தமிழோசை அமுதம் தரும்.
ஒரு நாள் அதிகாலை
அணைத்து மொழிக்கூட்டம்.
மொழிகள் பேசியது - தம்மை
முன்னிலைப் படுத்திக் கொள்ள.
ஆங்கிலம் சொன்னது
அகிலம் ஆள்பவன் நானென்று !
இந்தி சொன்னது
இந்தியாவின் மொழி தானென்று!
சமஸ்கிருதம் சொன்னது
ஆண்டவனறியும் மொழி தாமென்று!
தமிழ் சொன்னது - உங்களின்
தாய் நானென்று !!!
மலரும் மழலை கூறும் "அ"கரம்
முதுமை மொழியும் ஆயுதம்
பிறமொழியில் காணாத "ழ" கரம்
அப்பப்பா ....
தமிழ் எத்தனை இனிமை - இது
தமிழன் மொழி என்பது பெருமை.
இசைக்கு உவமை குயில்
அது கூவும் மொழி தமிழ்.
மழைக்கு ஆடும் மயில்
அதுகுளிருக்கு போர்வை தந்தது தமிழ்.
கருத்துக்கு முதன்மைப் பெறுவது குறள்
அதுபிறந்து வளர்ந்த மொழி தமிழ்.
வன்மையைச் சொல்ல வல்லினம்
மென்மையைச் சொல்ல மெல்லினம்
இடைப்பட்ட நிலைதான் இடையினம்.
அறிவாயா நீ காரணம்?
வன்மைக் கொள் அதர்மம் தீண்டும் நேரத்தில்
மென்மைக் கொள் காதல் தொடும் தருணத்தில்
இடையில் நில் கோபம் வரும் தீக்கணத்தில்.
மனதின் ஓசை கேட்டால் ...
பகைமைக் கூட நட்பாகும்.
மழலை ஓசை கேட்டால்...
கோபம் கூட பாசமாகும்.
இயற்கையின் ஓசை கேட்டால் ...
கற்கள் கூட கவிதையாகும்...
தமிழின் ஓசை கேட்டால்...
தகரம் கூட தங்கமாகும்.
தமிழா !
தமிழோசை காண்
மனதாசை வீண்
மணியோசை இனிது
தமிழோசை அமுது
குழலோசை கானம்
தமிழோசை ஞானம்
மழலையோசை உன் படைப்பு
தமிழோசை அவன் படைப்பு.
தமிழை தெரிந்தவன் கால் மனிதன்
தமிழை அறிந்தவன் அரை மனிதன்
தமிழை உணர்ந்தவன் முக்கால் மனிதன்
தமிழை காப்பவன் முழு மனிதன்.
தாயை மறந்தவன் தரம் கெட்டுப் போவான்;
தமிழை மறந்தவன் தானழிந்து போவான்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
No comments:
Post a Comment