ஒரு இஸ்லாமிய மனிதனக்கு, இந்து மதக் கடவுள்களின் புகைப்படங்களை விற்கும் ஒரு அங்காடியின் வெளியே, ஒரு ஐயர், அந்த மனிதனின் புகைப்படத்தை வைத்து, மாலையிட்டு, விளக்கு ஏற்றி இரங்கல் தெரிவிக்கிறார். அதே மனிதனுக்காக, ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் வெளியே, மெழுகுகள் ஏற்றப்பட்டு பிரார்த்திக்கப்படுகின்றது. அதே மனிதனுக்காக ஒரு இஸ்லாம் கல்லூரியில், இரங்கல் கூட்டம் நடைபெறுகின்றது. அதே மனிதனுக்காக வழி நெடுகிலும், இரங்கல் பதாகைகள், சுவரொட்டிகள்; இப்படிக்கு, இவண், என்ற இடத்தில் மட்டும் கட்சியின் பெயரோ , உறவினர்களின் பெயரோ, சாதியின் பெயரோ இல்லை, வெவ்வேறு வார்த்தைகள். கீழத்தெரு மக்கள், கங்கா ஸ்வீட்ஸ் , அசோக் மற்றும் நண்பர்கள், இன்னும் பல ... இவை எல்லாம் எப்படி ஒரு மனிதனால் சாத்தியமானது ??? அதுவும் அவன் இறப்பிற்கு பிறகு ?
உண்மையான உள்ளம் கொண்டு ஒருவன் பழகினால், எளிமையின் பின் நடந்து சென்றால், அறிவில் மிகுந்தாலும் அடக்கம் கொண்டால், பிள்ளை மனம் கொண்டு பிள்ளைகளோடு உறவாடினால், அனைவரையும் சமமாக மதித்தால், நிறம் , இனம், மதம் தாண்டி மனிதர்கள் அவனைத் தன்னுள் ஒருவனாக நினைப்பார்கள்; பெருமிதம் கொள்வார்கள்; உள்ளத்திலிருந்து கண்ணீர் சிந்துவார்கள். தலைவன் என்பவன் தன்னோடு நடந்து செல்பவன்; தன்னைச் சுமக்கச் சொல்பவன் அல்ல. கலாம் ஒரு மனிதர்; தலைவர். கலாம் சார், என் நிறைவேறாத ஆசைகளுள் உங்களைச் சந்திப்பதையும் ஒன்றாக இறைவன் சபித்து விட்டான். நீர் சொன்னது போல், கனவு காண்கிறேன், உங்களைப் போன்ற மனிதர்களை சந்திப்பதற்காக. நீர் வாழ்க ! எங்கள் மனங்களில். #RIP #APJAbdulkalam
_ சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100