|
Copyright : Flickr |
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது அந்தத் தேடுதல் வேட்டை . என் நண்பனின் தம்பிக்கு ( என் தம்பி எனவும் கொள்ளலாம்.) ஒரு மேல் சட்டை வாங்குவது அதன் நோக்கம். அதன் தளபதிகள் என் தாய் தந்தையர்; நான் போர் வீரன். அனைத்து அங்காடிகளையும் அலசி ஆராய்ந்த பின்பு மிஞ்சியது ... ஏமாற்றமே ! ஏனெனில்... தளபதிகளுக்கு இந்த வீரன் இட்டக் கட்டளை, " White or Black T-Shirt L size with reasonable prize and it should impress me " . அனைத்துக் கோட்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டாலும், " IMPRESS ME " என்னும் கோட்பாடு பூர்த்தி செய்யப்படாததால் மிஞ்சியது ஏமாற்றமே !
ஆம் ! நண்பர்களே , தாங்கள் கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ? ஞாபகம் இருக்கிறதா ? எனக்குத் தெரியாது இந்தப் பரிசு கொடுக்கும் பழக்கத்தை எவன் ஏற்படுத்தியது என்று ! ( வேண்டுமென்றால் ஹாய் மதனிடம் கேட்கலாம் ) . அவன் எவனாக இருந்தாலும் , அவன் ஞானி. அகமகிழ்ச்சிக்கு வித்திடுபவர்கள் ஞானிகள். பரிசுகளும் அப்படியே , அகமகிழ்ச்சிக்கு வித்திடும் அருமருந்து.
இங்கு பெரும்பாலும், பரிசுகள் பணங்களால் வாங்கப்படுகின்றன. அவரவர் கையிருப்பை பொருத்தும், பின் வரும் லாபங்கள் நினைத்தும், பொருட்களின் இருப்பைப் பொருத்தும். இப்படியா பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ? எங்கு பரிசுகள் மனங்களால் வாங்கப்படுகின்றனவோ , அங்கு தான் பரிசுகளுக்குப் பரிசளிக்கப்படுகின்றது.
பரிசு என்பது வெறும் பொருள் அல்ல . அது கொடுப்பவனுடைய சுவாசம், பெருபவனுடைய உயிர். சுவாசம் எவ்வளவு தூய்மையானதோ ! விலைமதிப்பிலாததோ ! அது போல் நாம் தரும் பரிசுகள் இருக்க வேண்டும். அதைப் பெறுபவர் அந்த சுவாசத்தால் தான் பெற்ற உயிர் போல் அதை பாவிக்க வேண்டும் . இது நேர்ந்தால் அங்கு ஒரு உலகம் பிறக்கும். நட்பு உலகம்! பணமில்லாத, பேதமில்லாத, அன்பால் நிறைந்த நட்புலகம்.
பரிசுகள் இருவகைப்படும் . ஆடம்பரத்திற்காக .... உபயோகப்படுவதற்காக ... இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துத் தருவது புத்திசாலித்தனம். அதை உம்மால் தேர்வு செய்ய இயலவில்லை என்றால், தாங்கள் அந்த நபருக்குப் பரிசளிக்கத் தேவையில்லை. ஏனெலில் ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் தரும் பரிசுகளும் வீணே ! அந்த உறவு நீடித்து நிலைக்கும் என்ற கற்பனையும் வீணே!
பரிசுகள் எப்பொழுதும் குசேலனின் அவில் போல இருக்க வேண்டும். பிடித்தமானதாக; பயனுள்ளதாக.
நாம் வாங்கிய பொருட்களின் விலை தெரியக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி அதன் விலை அட்டையை அகற்றி விட சொல்கிறோம்.இது எதை மறைப்பதற்காக ? சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய போலியான கவுரவத்திற்காக. உங்களைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர் என்றால், அந்தப் பரிசின் விலையை அவர் கண்டுகொள்ளப் போவதில்லை. " இது என்னால் முடிந்தது. இதில் பணத்தின் மதிப்பு குறைவானதாக இருக்கலாம்; ஆனால், அன்பு அளவுக்கதிகமாக இருக்கிறது " என்று , எங்கு உங்களால் பரிசளிக்க முடிகிறதோ , அங்கு தான் பரிசின் வீரமும், உங்கள் நட்பின் தீரமும் ஒளிந்திருக்கிறது.
பரிசளிக்கும் முன் சிந்திக்க வேண்டியவை :
- முதலில் உங்கள் நண்பருக்கு எது தேவையென்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப பரிசளியுங்கள்.
- உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மறக்காமல் அதைத் தேர்ந்தெடுங்கள். விலையின் அளவுகோல் கொண்டு ரசனையை அளக்காதீர்கள்.
- விலைஅட்டையை நீக்காமல் பரிசளித்துப் பழகுங்கள்.
- வழக்கமாக ... பிறந்தநாள், திருமண நாள் என பரிசளித்துப் பழகாதீர்கள். ஏனெலில் அது எதிர்பார்ப்பை வளர்த்து விடும். ஒரு சூழலில் உங்களால் பரிசளிக்க இயலவில்லை என்றால் தன் மீதுள்ள அன்பு குறைந்து விட்டதோ என உங்கள் நண்பர் நினைக்கத் தோன்றும். எனவே, ஆச்சரியமாக ! சம்பந்தமில்லாத நாட்களில் பரிசளியுங்கள். அது அந்த நாளையும் உங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
- பரிசுகளோடு, அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் சிறுகுறிப்பில் எழுதி பரிசளியுங்கள். அது அன்பை மேலும் வலுப்படுத்தும்.
- பொதுவாக கைக்குட்டை, பேனா போன்றவை பரிசளிக்கக்கூடாது என்னும் நம்பிக்கைகள் இருக்கின்றன. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள் .. தவறில்லை. அன்பானவர்களுக்கு மத்தியில் உலவும் சிறுமுட்டாள்த்தனம் அழகானவை.
- கொடுத்த பரிசுகளை எந்தவொரு சூழலிலும் சொல்லிக்காண்பிக்காதீர்கள். அது, உங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்வது போல் அமையும்.
- பரிசுகள் பற்றிய எதிர்பார்புகளை உருவாக்காதீர்கள். நீங்களும் எதிர்பார்க்காதீர்கள். ஆச்சரிய பரிசுகள் மட்டுமே அழகானவை! உயிரானவை !
பரிசுகள் அழகானவை. பரிசளிப்பவர்கள் அழகானவர்கள். பரிசு பெறுபவர்கள் பாக்கியவான்கள். வாருங்கள், இன்று முதல் பரிசளித்துப் பழகுவோம்.
சரி ! உங்களில் யார் எனக்கு முதல் பரிசு அளிக்கப்போகிறீர்கள்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100