Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும் - விமர்சனம்


னாதை ஆசிரமத்தில் வளர்ந்து, பெரியவனாகி, முகத்தில் புன்னகையும், பேச்சில் மயக்கும் வித்தையையும் கொண்ட 'பிக்ஸ் இட்' நிறுவனத்தின் சேல்ஸ் ரெப்  அரவிந்த் ( அறிமுகம் துல்கர் - நடிகர் மம்முட்டியின் மகன்)  உடைந்ததை எல்லாம் ஒட்ட வைக்கின்றார் உறவுகள் உட்பட. இவரே கதையின் நாயகன். பார்க்கும் பட்சத்தில் ஒட்டிக் கொள்ளும் முகபாவம், நடிப்பு, மென்மை துல்கருக்கு. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்வரவு.

முகத்தில் மெல்லிய சோகம் இலையாட, காதலனின் விருப்பங்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளும், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே முடங்கிக்கொள்ளும், அப்பாவின் இரண்டாம் திருமணத்தை அங்கீகரித்தும், அதனை தன் மனம் ஏற்க முடியாமல், இறந்த தன் தாயில் நினைவுகளோடு வாழ  ஏங்கும் பனிமலை அரசு மருத்துவமனையின் இளம் மருத்துவர் அஞ்சனா, கதையின் நாயகி. ( நஸ்ரியா )

ஸ்ரியாவின் சித்தியாக, எழுத்தாளராக மதுபாலா, சுகாதரத் துறை அமைச்சராக பாண்டியராஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் சங்கத் தலைவராக ரோபோ சங்கர், துல்கரின் நண்பன் அர்ஜுனன், அமைச்சரின் பி.ஏ வாக காளி, ஆசிரம இடத்தின் உரிமையாளராக வினுச்சக்கரவர்த்தி, நியூக்கிளியர் ஸ்டாராக ஜான் விஜய்,   ரேடியோ ஜாக்கி பாலாஜி, அப்புறம் முக்கியமாக, ப்ரைம் டிவியின் செய்தி வாசிப்பாளராக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இன்னும் பலர் இணைத்து கலந்து கட்டிய காமெடி மற்றும் கொஞ்சம் கருத்து நிறைந்த படமே வாயை மூடி பேசவும்.

னிமைலையை  "டம்ப் ஃப்ளு" என்ற வியாதி தாக்குகிறது. அது என்ன, எப்படி பரவுகிறது, எப்படி அதைத் தடுப்பது என ஒரு டாக்டர் கணக்காக அவர்களே சொல்லிவிடுகின்றனர். அதலால், நாம் யாரும் பயப்படத் தேவையில்லை. அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை யாரும் யாருடனும் பேச கூடாது எனும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏனெலில் அது பேசுவது மூலம் தான் பரவுமாம். இத்தகைய சூழலில், ஆர்.ஜே வாகத் துடிக்கும் துல்கர், தன் காதலை பிடிக்க வில்லை என சொல்லத் துடிக்கும் நஸ்ரியா மற்றும் பலரின் சூழ்நிலை என்னாகிறது என்பதே படத்தின் சுருக்கக் கதை.

காமெடி கலாட்டாவிற்கு ரோபோ உத்திரவாதம். 'விஸ்வரூப' விவகாரத்தை எடுத்துக் கலந்து கட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் முன் பாதி சுமார் ரகம். படத்தின் பின்பாதியில் யாரும் பேசாவிடினும், அயர்வு ஏற்படுத்தாமல் கடக்கின்றது. பின்னணி இசை நன்று. பாடல்களில், 'காதல் அரையைத்' தவிர மற்ற எதுவும் மனதில் சிவக்கவில்லை. கற்பனைக் கதையில் காமடி ரசம் பிழிந்து, கொஞ்சம் கருத்துச் செர்ரி வைத்திருக்கிறார்கள். நல்ல முயற்சி இருப்பினும், அனைத்து மக்களுக்கும் இது பிடிக்குமா என்பது சந்தேகம். படம் 'கொஞ்சம் நீளம்' துல்கர் கொடுக்கும் ஜவ்வு மிட்டாய் போல. மத்தபடி குமுதா ஹாப்பி அண்ணாச்சி !!!

பிடித்தது:

  1. கற்பனை  
  2. நகைச்சுவை 
  3. கருத்து ( பேசுனா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும் )
  4. ஒளிப்பதிவு 
  5. எடிட்டிங் 
பிடிக்காதது:
  1. திரைக்கதை நீளம் 
  2. பாடல்கள் 
டம் முடிந்த பின்பு, தாங்கள் தங்கள் வாழ்வில் கொஞ்சம் யோசித்து உங்கள் மனதில் பட்டதை சமரசம் செய்து கொள்ளாமல் தைரியமாக செய்தால் அதுவே படத்தின் வெற்றி. மொத்தத்தில் வாயை மூடி பேசவும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும் வைப்புகள் அதிகம் உள்ள படம்.

எனது மதிப்பீடு - 3.5/5 

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Related Posts Plugin for WordPress, Blogger...